
நவ.24-ல் இந்திய அணியுடன் கேப்டன் ரோஹித் சர்மா இணையவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி பார்டர் - காவஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் பெர்த்தில் நாளை (நவம்பர் 22) தொடங்குகிறது.
இரண்டாவது குழந்தை காரணமாக முதல் டெஸ்டில் ரோஹித் சர்மா பங்கேற்பது சந்தேகமாகவே இருந்தது. இந்நிலையில் ரோஹித் சர்மா - ரித்திகா தம்பதிக்கு கடந்த வெள்ளிக்கிழமை இரண்டாவது குழந்தை பிறந்தது.
பெர்த் டெஸ்டுக்கு ஒரு வாரம் முன்னதாக குழந்தை பிறந்துவிட்டதால், ரோஹித் சர்மா இந்திய அணியுடன் விரைவில் இணைவதற்கான வாய்ப்பு இருப்பதாகவே கருதப்பட்டது.
எனினும், மனைவியுடன் கூடுதல் நேரம் செலவிட வேண்டியுள்ளது என பிசிசிஐயிடம் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது. எனவே, பெர்த் டெஸ்டில் இந்திய அணியை ஜஸ்பிரித் பும்ரா வழிநடத்தவுள்ளார்.
இந்நிலையில் ரோஹித் சர்மா நவம்பர் 23 அன்று இந்தியாவில் இருந்து புறப்படவுள்ளதாகவும், நவ.24 அன்று இந்திய அணியுடன் இணையவுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதனால் அவர் 2-வது டெஸ்டில் பங்கேற்பதும் உறுதியாகியுள்ளது. மேலும், 2-வது டெஸ்டுக்கு முன்னதாக நடைபெறவுள்ள பயிற்சி ஆட்டத்தில் இந்தியா ஏ அணியில் ரோஹித் சர்மா விளையாடவுள்ளதாகவும் கூறப்படுகிறது.