
டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக ரோஹித் சர்மா அறிவித்துள்ளார்.
மும்பையைச் சேர்ந்த ரோஹித் சர்மா டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமாகியிருந்தாலும் டெஸ்டில் அறிமுகம் ஆகாமலே இருந்தார். 2013-ல் தான் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக ஈடன் கார்டன்ஸ் டெஸ்டில் அறிமுகமானார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இவருடைய இடம் நிலையானதாக இல்லாமல் இருந்தது. டெஸ்டிலும் தொடக்க பேட்டராக களமிறங்கத் தொடங்கியதும் நிலையான இடத்தைப் பிடித்தார்.
விராட் கோலி கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியதைத் தொடர்ந்து, ரோஹித் சர்மா கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
டெஸ்டில் அண்மைக் காலமாக மிக மோசமாக விளையாடி வந்தார் ரோஹித் சர்மா. கடைசியாக விளையாடிய 8 டெஸ்டுகளில் ரோஹித் சர்மாவின் பேட்டிங் சராசரி 10.93. இதில் ஒருமுறை மட்டுமே அவர் அரை சதத்தைக் கடந்துள்ளார். வங்கதேசத்துக்கு எதிராக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 2-0 என டெஸ்ட் தொடரை வென்றாலும், சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக 0-3 என டெஸ்ட் தொடரை இழந்தது. பார்டர்-காவஸ்கர் தொடரிலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா 1-3 எனத் தோல்வியடைந்தது. இந்தியாவும் சரிவைச் சந்தித்தது, ரோஹித் சர்மாவின் ஃபார்மும் சரிவைச் சந்தித்ததால், பார்டர்-காவஸ்கர் தொடரில் சிட்னி டெஸ்டிலிருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட்டார்.
இதனால், இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா கேப்டன் பொறுப்பில் நீடிப்பது கேள்விக்குறியாக இருந்தது. இந்நிலையில் தான் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்துள்ளார்.
"டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறேன். டெஸ்டில் இந்திய அணிக்காக விளையாடியதைப் பெருமையாகக் கருதுகிறேன். இத்தனை ஆண்டுகளாக உங்களுடைய அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காகத் தொடர்ந்து விளையாடுவேன்" என்று தனது இன்ஸ்டகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார் ரோஹித் சர்மா.
67 டெஸ்டுகளில் 40.57 சராசரியில் 12 சதங்கள்/18 அரை சதங்கள் உள்பட 4,301 ரன்கள் எடுத்துள்ளார். ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி 24 டெஸ்டுகளில் 12-ல் வெற்றி பெற்று 9-ல் தோல்வியடைந்துள்ளது. 3 டெஸ்டுகள் டிராவில் முடிவடைந்துள்ளன. இவர் ஏற்கெனவே சர்வதேச டி20யிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார்.
ரோஹித் சர்மா ஓய்வு பெற்றுள்ளதன் மூலம், இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் புதிய கேப்டனை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் பிசிசிஐ உள்ளது. ஜஸ்பிரித் பும்ராவின் உடற்தகுதியைப் பொறுத்தவரை எல்லா டெஸ்டுகளிலும் அவரால் விளையாட முடியாது என்பதால், இவரை கேப்டனாக அறிவிக்க முடியாத சிக்கல் உள்ளது. டெஸ்ட் கேப்டனுக்கான போட்டியில் கேஎல் ராகுல், ஜஸ்பிரித் பும்ரா, ஷுப்மன் கில், ரிஷப் பந்த் ஆகியோர் உள்ளார்கள்.
ரோஹித் சர்மா
டெஸ்டுகள் - 67
ரன்கள் - 4,301
சராசரி - 40.57
சதங்கள் - 12
அரை சதங்கள் - 18
ரோஹித் சர்மா தலைமையில் இந்தியா
டெஸ்டுகள் - 24
வெற்றி - 12
தோல்வி - 9
டிரா - 3