வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்டுக்கு முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார் ரோஹித் சர்மா.
இந்தியா, வங்கதேசம் இடையிலான இரு ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் செப்டம்பர் 19 அன்று தொடங்குகிறது. முதல் டெஸ்ட் சென்னையிலும், இரண்டாவது டெஸ்ட் செப்டம்பர் 27-ல் கான்பூரிலும் தொடங்குகிறது.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த ரோஹித் சர்மா, “அனைவரும் ஓய்வுக்கு பிறகு திரும்பியுள்ளோம். எனவே பயிற்சி முகாம் இருப்பது அவசியம் என எண்ணினோம். வீரர்கள் ஒரு சிலர், துலீப் கோப்பையில் விளையாடினார்கள். எனவே இப்போது அனைவரும் தயாராக இருக்கிறோம். 11 வீரர்களைத் தேர்வு செய்வதில் நாங்கள் அதிகம் யோசிப்பது இல்லை, கடந்த காலங்களில் வீரர்கள் விளையாடியது, அவர்கள் அனுபவம் என இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு அணியைத் தேர்வு செய்வோம். அதிர்ஷ்டவசமாக பெரும்பாலானோர் காயமின்றி இருக்கிறார்கள்.
அனைத்து தொடர்களும் முக்கியமானவை, எனவே இது ஆஸ்திரேலியத் தொடருக்கான பயிற்சி இல்லை. அனைத்து தொடர்களிலும் எங்களின் முழு திறனையும் வெளிப்படுத்துவோம். கே.எல். ராகுல் அனைத்து ஆட்டங்களிலும் விளையாடுவார் என்று எதிர்பார்கிறோம். அவரது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதே அவருக்கு கொடுக்கப்பட்ட அறிவுரை. அணியில் உள்ள சிறந்த வீரர்கள் அனைவரும் அனைத்து ஆட்டங்களிலும் விளையாடுவது சிரமம்.
கம்பீரை எனக்கு நன்றாகவே தெரியும். ஒவ்வொரு பயிற்சியாளருக்கும் ஒவ்வொரு பாணி இருக்கும். 17 ஆண்டுகளாக விளையாடி கொண்டிருக்கிறேன். எனவே சூழலுக்கு ஏற்ப எப்படி விளையாட வேண்டும் என்பது எனக்கு நன்றாக தெரியும். அனைத்து அணிகளும் இந்தியாவை வீழ்த்த வேண்டும் என்று நினைப்பார்கள், ஆனால் அதைப் பற்றி எங்களுக்கு கவலையில்லை” என்று தெரிவித்துள்ளார்.