உலகக் கோப்பையை வென்ற ரோஹித் கூறியது என்ன?

"விராட் கோலியின் பேட்டிங்கில் யாருக்கும் எந்தச் சந்தேகமும் இல்லை."
உலகக் கோப்பையை வென்ற ரோஹித் கூறியது என்ன?
ANI

கடந்த 3, 4 ஆண்டுகளாக நாங்கள் போட்ட உழைப்பின் பலனைதான் இன்று காண்கிறோம் என உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

பார்படாஸில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதிச் சுற்றில் தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் ஆகியுள்ளது இந்திய அணி. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. கோலி அதிகபட்சமாக 76 ரன்கள் எடுத்தார். அடுத்து பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்துத் தோல்வியடைந்தது. பாண்டியா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கோலி இறுதிச் சுற்று ஆட்ட நாயகனாகவும், பும்ரா தொடர் நாயகனாகவும் தேர்வானார்கள்.

ரோஹித் சர்மா கூறியதாவது:

"கடந்த 3, 4 ஆண்டுகளாக நாங்கள் எதிர்கொண்டு வந்ததை விவரிப்பது மிகக் கடினம். ஓர் அணியாக நாங்கள் மிகக் கடுமையாக உழைத்துள்ளோம். திரைக்குப் பின் நிறைய உழைப்பைப் போட்டுள்ளோம். இன்று மட்டுமல்ல, கடந்த 3, 4 ஆண்டுகளாக இந்த உழைப்பைப் போட்டு வருகிறோம். இவற்றின் பலனைதான் இன்று காண்கிறோம். உயர் அழுத்தங்கள் நிறைந்த ஆட்டங்கள் நிறைய விளையாடியுள்ளோம். அதில் தோல்வியையும் சந்தித்துள்ளோம்.

ஆனால், விஷயங்கள் நமக்கு எதிராகச் செல்லும்போது என்ன செய்ய வேண்டும் என்பதை வீரர்கள் புரிந்துவைத்துள்ளார்கள். ஓர் அணியாக இணைந்து விளையாடினோம். அனைவருக்கும் இந்தக் கோப்பையை வென்றாக வேண்டியிருந்தது. அணி நிர்வாகத்துக்கும் நிறைய பெருமை சென்றடைய வேண்டியுள்ளது.

விராட் கோலியின் பேட்டிங்கில் யாருக்கும் எந்தச் சந்தேகமும் இல்லை. அவரிடம் இருக்கும் தரம் குறித்து எங்களுக்குத் தெரியும். நேரம் வரும்போது, பெரிய வீரர்கள் அணிக்குத் தேவையான முக்கியமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள். ஒருமுனையில் விக்கெட்டை பாதுகாத்து நீண்ட நேரம் களத்தில் நின்று விளையாட வேண்டும். அதை விராட் கோலி செய்தார். புதிய வீரர் வந்த உடனே அதிரடி காட்டுவதற்கான ஆடுகளம் அல்ல இது. இந்த இடத்தில்தான் விராட் கோலியின் அனுபவம் கைகொடுக்கிறது.

ஜஸ்பிரித் பும்ராவைப் பல வருடங்களாகப் பார்த்து வருகிறேன். இணைந்து விளையாடி வருகிறேன். அவரால் என்ன செய்ய முடியும் என்பது எனக்குத் தெரியும். ஆனால், அதை எப்படி செய்கிறார் என்பது எனக்குப் பிடிபட்டதில்லை. நிச்சயமாக அது 'மாஸ்டர் கிளாஸ்'. தனது திறனை நம்பக்கூடியவர் அவர். மிகவும் தன்னம்பிக்கைக் கொண்டவர்.

ஹார்திக் பாண்டியாவும் மிகச் சிறப்பாகப் பந்துவீசினார். கட்டுப்படுத்த வேண்டிய ரன்கள் எதுவாக இருந்தாலும், அந்தக் கடைசி ஓவரில் நெருக்கடி இல்லாமல் வீச வேண்டும்.

நியூயார்க் முதல் பார்பேடாஸ் வரை ரசிகர்கள் தொடர்ந்து சிறப்பாக ஆதரவு தந்து வந்தார்கள். இந்தியாவில் உள்ள ரசிகர்களுக்கும் நன்றி. இந்தியாவில் நள்ளிரவு. இருந்தபோதிலும், இந்தத் தருணத்தைக் காண அவர்கள் காத்திருப்பார்கள் என தெரியும். இந்தத் தருணத்துக்காகதான் ரசிகர்களும் நீண்ட நாள்களாகக் காத்திருந்தார்கள்" என்றார் ரோஹித் சர்மா.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in