பிஜிடி தொடரில் ஷமி சேர்க்கப்படுவாரா?: ரோஹித் சர்மா பதில்

"சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியில் விளையாடும்போது முஹமது ஷமிக்கு முழங்காலில் வீக்கம் ஏற்பட்டுள்ளது."
பிஜிடி தொடரில் ஷமி சேர்க்கப்படுவாரா?: ரோஹித் சர்மா பதில்
1 min read

முஹமது ஷமி எப்போது வேண்டுமானாலும் இந்திய அணிக்காக விளையாடலாம், அவருக்கான கதவு திறந்து இருப்பதாக கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான அடிலெய்ட் பகலிரவு டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த டெஸ்டில் இந்திய அணி பேட்டிங்கில் இரு முறையும் 200 ரன்களைக்கூட தொடவில்லை. இது பெரும் பின்னடைவாக அமைந்தது.

பந்துவீச்சில் பும்ரா மட்டும் அழுத்தம் கொடுத்து விக்கெட்டுகளுக்கான முயற்சிகளை மேற்கொண்டிருந்தபோது, மறுமுனையிலிருந்து பெரிய ஒத்துழைப்பு இல்லாததுபோல இருந்தது. முஹமது சிராஜ் நன்றாகப் பந்துவீசினாலும், அவை விக்கெட்டாக மாறவில்லை. ஹர்ஷித் ராணாவுக்கு இந்த டெஸ்ட் சவாலானதாக அமைந்தது.

பும்ரா மட்டுமே விக்கெட்டுகளை வீழ்த்த முடியாது, பும்ராவை மட்டுமே இந்திய அணி சார்ந்திருக்க முடியாது என்ற பேச்சுகள் வரத் தொடங்கின. இந்தச் சூழலில் ஷமி அணியில் சேர்க்கப்படுவது குறித்த கேள்விகள் எழுந்துள்ளன.

அடிலெய்ட் டெஸ்ட் தோல்விக்குப் பிறகு முஹமது ஷமி குறித்து கேப்டன் ரோஹித் சர்மா விளக்கமளித்ததாவது:

"சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியில் விளையாடும்போது முஹமது ஷமிக்கு முழங்காலில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. எனவே, அவரைக் கண்காணித்து வருகிறோம். அவர் டெஸ்டில் விளையாடுவதற்குத் தயாராக, இது தடையாக உள்ளது.

நீண்ட நாள்கள் ஆனதால் 100 சதவீதத்துக்கும் மேல் முழு உறுதி செய்யப்பட வேண்டியுள்ளது. இங்கு வந்து அணிக்காகச் செயல்பட வேண்டும் என்று அவருக்கு அழுத்தம் தர விரும்பவில்லை. நிபுணர்கள் அவரைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். இவர்களுடைய அறிவுறுத்தலின்படி முடிவெடுக்கப்படும். 20 ஓவர்கள் களத்தில் நின்று 4 ஓவர்கள் பந்துவீசிய பிறகு, ஒவ்வோர் ஆட்டம் முடிந்தவுடனும், அவர் எப்படி இருக்கிறார் என்பதைச் சிலர் கண்காணித்து வருகிறார்கள்.

அவர் எப்போது வேண்டுமானாலும் இந்திய அணிக்காக விளையாடலாம். அவருக்கான கதவுகள் திறந்தே உள்ளன" என்றார் ரோஹித் சர்மா.

2023 உலகக் கோப்பைக்குப் பிறகு முஹமது ஷமி இந்தியாவுக்காக எந்தவொரு போட்டியிலும் விளையாடவில்லை. கணுக்கால் காயம் காரணமாக பிப்ரவரியில் அறுவைச் சிகிச்சை செய்து கொண்டார் முஹமது ஷமி. இதிலிருந்து குணமடையும்போது நிறைய பின்னடைவுகள் அவருக்கு ஏற்பட்டுள்ளன. ரஞ்சி கோப்பையில் களமிறங்கினார். தொடர்ந்து தற்போது சையது முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியில் விளையாடி வருகிறார்.

இவருடைய உடற்தகுதியில் மேற்கொண்டு பின்னடைவு ஏதும் ஏற்படாத பட்சத்தில், இவர் ஆஸ்திரேலியாவுடனான பிஜிடி தொடரில் விரைவில் சேர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in