பெர்த்திலேயே ஓய்வு குறித்து அஸ்வின் பேசினார்: உரையாடலை உடைத்த ரோஹித்

"அடிலெய்ட் பகலிரவு டெஸ்ட் வரை காத்திருக்குமாறு அவரைச் சமாதானம் செய்தேன்."
பெர்த்திலேயே ஓய்வு குறித்து அஸ்வின் பேசினார்: உரையாடலை உடைத்த ரோஹித்
ANI
2 min read

தான் பெர்த் வந்தடைந்தபோதே அஸ்வின் ஓய்வு குறித்து உரையாடியதாக கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா, இந்தியா இடையிலான மூன்றாவது டெஸ்ட் டிராவில் முடிந்தது. இந்தச் செய்தியுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து அஸ்வின் ஓய்வு பெற்ற செய்தியும் வந்தது.

கேப்டன் ரோஹித் சர்மாவுடன் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்த அஸ்வின், ஓய்வு முடிவை வெளியிட்டார். தன்னிடம் இன்னும் கொஞ்சம் கிரிக்கெட் மீதமுள்ளதாகக் கூறிய அவர், இருந்தாலும் அதை கிளப் நிலை கிரிக்கெட்டில் வெளிப்படுத்துகிறேன் என்று அஸ்வின் கூறினார்.

மேலும், தற்போதைய நிலையில் கேள்விகள் எதையும் எதிர்கொள்ளப்போவதில்லை என்று கூறி அஸ்வின் கடந்துவிட்டார்.

கேப்டன் ரோஹித் சர்மா அஸ்வினின் ஓய்வு முடிவு குறித்து கூறியதாவது:

"சில முடிவுகள் மிகவும் தனிப்பட்டவை. அதுகுறித்து நிறைய கேள்விகளை எழுப்பக் கூடாது. ஒரு வீரர் ஒரு முடிவை எடுத்தால், அந்த முடிவை எடுப்பதற்கான வாய்ப்பை அவருக்கு வழங்க வேண்டும்.

அதுவும் இத்தனை ஆண்டுகளாக இந்தியாவுக்காக விளையாடிய அஸ்வின் போன்ற வீரர்களுக்கு, இதுமாதிரியான முடிவை சொந்தமாக எடுக்க அனுமதிக்க வேண்டும். சக வீரர்களாக அவருடைய முடிவை மதிக்கிறோம். தான் என்ன செய்ய வேண்டும் என்பதில் அஸ்வின் மிகத் தெளிவாக இருக்கிறார். அவருடையச் சிந்தனைக்கு அணி முழு ஆதரவைத் தருகிறது.

இரு டெஸ்டுகளுக்கு இடையே இடைவெளி உள்ளது. அணியாக மீண்டும் ஒன்று கூடி இதுதொடர்பாக சிந்திக்க வேண்டும். இதை எப்படி அடுத்து எடுத்துச் செல்ல வேண்டும் என்பது பற்றி சிந்திக்க நேரம் உள்ளது. ஆனால் அஸ்வின் குறித்து பேச வேண்டும் என்றால், அவருடைய முடிவில் அவர் மிகத் தெளிவாக இருக்கிறார்.

நான் பெர்த் வந்தபோதே ஓய்வு முடிவு குறித்து அறிந்தேன். முதல் டெஸ்டின் முதல் மூன்று, நான்கு நாள்கள் நான் பெர்த்தில் இல்லை. ஆனால், அப்போதிலிருந்தே அவர் மனதில் இந்த எண்ணம் இருந்திருக்கிறது. இந்த முடிவின் பின்னணியில் நிறைய விஷயங்கள் இருக்கும். அதுகுறித்து அஸ்வின் நிச்சயம் பதிலளிப்பார். ஆனால், அணி என்ன நினைக்கிறது என்பதை அவர் புரிந்துகொண்டார். எந்த மாதிரியான கூட்டணியுடன் விளையாட வேண்டும் என நாங்கள் நினைக்கிறோம் என்பதை அவர் புரிந்துகொண்டார். நாங்கள் பிரிஸ்பேன் வந்தபோதுகூட, எந்தச் சுழற்பந்துவீச்சாளருடன் களமிறங்கவுள்ளோம் என்பதில் எங்களுக்குத் தெளிவு கிடையாது. சூழலை ஆராய்ந்து, கண்முன் என்ன சூழல் நிலவுகிறதோ அதற்கேற்ப முடிவு செய்தோம்.

ஆனால், நான் பெர்த் வந்தபோது நடந்த உரையாடல் இது தான். அடிலெய்ட் பகலிரவு டெஸ்ட் வரை காத்திருக்குமாறு அவரை எப்படியோ சமாதானம் செய்தேன். இந்தத் தொடரில் தற்போதைய நிலையில் நான் தேவைப்படவில்லை என்றால், கிரிக்கெட்டிலிருந்தே விடைபெறுவது நல்லது என அவர் நினைத்திருக்கிறார்.

ஆனால், நாங்கள் இன்னும் மெல்போர்ன் சென்றடையவில்லை. எனவே, அங்கு என்ன மாதிரியான சூழல் இருக்கும் எனத் தெரியாது. எந்த மாதிரியான கூட்டணியுடன் களமிறங்க வேண்டும் எனத் தெரியாது. இருந்தாலும், அவருடைய சிந்தனை இதுமாதிரியாக உள்ளது என்றால், அதற்கு மதிப்பளிக்க வேண்டும். இந்தக் கோணத்தில் சிந்திக்க அவரை அனுமதிக்க வேண்டும். தற்போதைய நிலையில், அவருடையச் சிந்தனைக்கு அனைவரும் பக்கபலமாக இருக்க வேண்டும்.

தற்போதைய நிலையில் இதுதான் என்னுடைய சிந்தனையாக உள்ளது. நானும் கௌதம் கம்பீரும் இப்படி தான் உரையாடியுள்ளோம்.

அஸ்வின் போன்ற ஒரு வீரர், இந்திய அணியின் நிறைய முக்கியமானத் தருணங்களில் இருந்த ஒரு வீரர், அணிக்காக பல வெற்றிகளைத் தேடித் தந்துள்ள ஒரு வீரர் இதுமாதிரியான முடிவை எடுக்க அனுமதிக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியம். இதுதான் சரியான தருணம் என்றால், அப்படியே இருக்கட்டும்" என்றார் ரோஹித் சர்மா.

106 டெஸ்டுகளில் 24 சராசரியுடன் 537 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பேட்டிங்கில் 6 சதங்கள், 14 அரைசதங்கள் உள்பட 3,503 ரன்கள் எடுத்துள்ளார். முத்தையா முரளிதரனுக்கு நிகராக 11 ஆட்டநாயகன் தொடர்களை வென்று சாதனை படைத்துள்ளார். 3,000 டெஸ்ட் ரன்கள், 300 டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்த 11 ஆல்-ரௌண்டர்களில் ஒருவராக அஸ்வின் உள்ளார்.

116 ஒருநாள், 65 சர்வதேச டி20-களில் விளையாடியுள்ள அஸ்வின், முறையே 156 விக்கெட்டுகள் மற்றும் 72 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in