சிட்னி டெஸ்டிலிருந்து ரோஹித் சர்மா விலகல்: பும்ரா கேப்டன்

ஷப்மன் கில் மீண்டும் அணிக்குத் திரும்புகிறார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்ANI
1 min read

ஆஸ்திரேலியாவுடனான சிட்னி டெஸ்டிலிருந்து ரோஹித் சர்மா விலகியதையடுத்து, ஜஸ்பிரித் பும்ரா அணியை வழிநடத்தவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஆஸ்திரேலியா, இந்திய இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் சிட்னியில் நாளை தொடங்குகிறது. பும்ரா தலைமையிலான பெர்த் டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்றது. ரோஹித் சர்மா தலைமையில் அடுத்த மூன்று டெஸ்டுகளில் இந்திய அணியால் ஒரு வெற்றியைக்கூட பெற முடியவில்லை. அடிலெய்ட் பகலிரவு டெஸ்டில் இந்தியா தோல்வியடைந்தது. பிரிஸ்பேன் டெஸ்ட் டிராவில் முடிந்தது. மெல்போர்ன் டெஸ்டில் இந்தியா மீண்டும் தோல்வியடைந்தது.

பிஜிடி தொடரில் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. சிட்னி டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்றால் மட்டுமே, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெறுவதற்கான வாய்ப்பைத் தக்கவைக்க முடியும். மேலும், பிஜிடி தொடரை தக்கவைக்கவும் இந்திய அணி வெற்றி பெற்றாக வேண்டும்.

பிஜிடி தொடரில் ரோஹித் தலைமையில் இந்திய அணி வெற்றி பெறவில்லை என்பது ஒருபுறம் இருக்க, பேட்டிங்கிலும் அவர் தொடர்ந்து சொதப்பி வருகிறார். கேஎல் ராகுலுக்காக நடுவரிசையில் விளையாடிய ரோஹித் சர்மா, மெல்போர்ன் டெஸ்டில் தொடக்க பேட்டராக களமிறங்கினார். கேஎல் ராகுல் மூன்றாவது வரிசையில் களமிறங்க, ஷுப்மன் கில் அணியிலிருந்து நீக்கப்பட்டார். தொடக்க பேட்டராகவும் ரோஹித் சர்மாவால் ரன் குவிக்க முடியவில்லை. ரோஹித் சர்மாவின் பேட்டிங் சராசரி 5 இன்னிங்ஸில் வெறும் 6.2.

இதனிடையே, சிட்னி டெஸ்டுக்கு முன்பு செய்தியாளர்கள் சந்திப்பில் ரோஹித் சர்மாவுக்குப் பதில் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் பங்கெடுத்தார். ஏற்கெனவே, அணியில் ரோஹித் சர்மாவின் இடம் குறித்து சந்தேகம் எழுந்த நிலையில், செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பங்கெடுக்காதது, கேள்விகளை எழுப்பின. கௌதம் கம்பீரும் அணியில் ரோஹித் சர்மாவின் இடம் குறித்து நேரடியாகவும் அவர் அணியில் நீடிப்பார் என்று உறுதிபடவும் தெரிவிக்காமல் கடந்து சென்றார். ஆடுகளத்தைப் பொறுத்தே விளையாடும் லெவன் குறித்து இறுதி செய்யப்படும் என்றார் கம்பீர்.

இந்த நிலையில், சிட்னி டெஸ்டிலிருந்து விலகிக் கொள்வதாக கௌதம் கம்பீர் மற்றும் தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கரிடம் ரோஹித் சர்மா தெரிவித்துவிட்டதாக ஆங்கில ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளன. இதன் அடிப்படையில், சிட்னி டெஸ்டில் ரோஹித் சர்மாவுக்குப் பதில் ஜஸ்பிரித் பும்ரா அணியை வழிநடத்தவுள்ளார். ஷப்மன் கில் மீண்டும் அணிக்குத் திரும்புகிறார். கேஎல் ராகுல் மீண்டும் தொடக்க பேட்டராக களமிறங்க, கில் மூன்றாவது வரிசையில் களமிறங்கவுள்ளார்.

இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு பிசிசிஐ தரப்பிலிருந்து இதுவரை வெளியாகவில்லை.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in