புனே டெஸ்டில் வெற்றி பெற்று சாதனை படைக்கும் நிலைமையில் உள்ளது நியூசிலாந்து அணி.
இந்தியா - நியூசிலாந்து இடையே புனேவில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 259 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
அதிகபட்சமாக கான்வே 76 ரன்களும், ரச்சின் ரவீந்திரா 65 ரன்களும், மிட்செல் சான்ட்னர் 33 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 7 விக்கெட்டுகளையும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி முதல் நாள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 16 ரன்கள் எடுத்தது.
இன்று நடைபெற்ற 2-வது நாளில், மிட்செல் சான்ட்னர் ஆரம்பம் முதல் இந்திய அணிக்கு நெருக்கடி அளித்தார்.
ஜெயிஸ்வால், கில் ஆகியோர் தலா 30 ரன்களில் வெளியேற, கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய ஜடேஜா 38 ரன்கள் எடுத்தார். மற்ற வீரரகள் யாரும் பெரியளவில் ரன்களை குவிக்கவில்லை.
இதன் மூலம் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 156 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. மிட்செல் சான்ட்னர் 7 விக்கெட்டுகளையும், கிளென் பிலிப்ஸ் 2 விக்கெட்டுகளையும் வகப்பற்றினர்.
2015 முதல் டெஸ்டில் விளையாடி வரும் மிட்செல் சான்ட்னர், முதல்முறையாக ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தி அசத்தினார்.
முதல் இன்னிங்ஸில் 103 ரன்கள் முன்னிலை பெற்ற நியூசிலாந்து அணி 2-வது இன்னிங்ஸிலும் சிறப்பாக விளையாடி வருகிறது. டாம் லேதம் பொறுப்புடன் விளையாடி 86 ரன்கள் சேர்த்தார். முதல் இன்னிங்ஸில் கலக்கிய வாஷிங்டன் சுந்தர் 2-வது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
2-வது நாள் முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்து 2-வது இன்னிங்ஸில் 301 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ஆட்டமிழக்காமல் டாம் பிளென்டல் 30 ரன்களும், கிளென் பிலிப்ஸ் 9 ரன்களும் எடுத்துள்ளனர்.
ஏற்கெனவே முதல் டெஸ்டில் தோல்வி அடைந்த இந்திய அணி, இந்த டெஸ்டிலும் தோற்றால் சொந்த மண்ணில் முதல்முறையாக நியூசிலாந்திடம் டெஸ்ட் தொடரில் தோற்கும் நிலைமை ஏற்படும்.