அஸ்வின், ஜடேஜாவுக்கும் சில மோசமான ஆட்டங்கள் அமையும் என்று இந்திய கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 டெஸ்டுகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. பெங்களூருவில் நடைபெற்ற முதல் டெஸ்டில் நியூசிலாந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
2-வது டெஸ்டில் நியூசிலாந்து அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இத்தொடரில் 2-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் வென்றுள்ளது.
கடைசியாக 2012-ல் இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரில் தோல்வியடைந்த இந்திய அணி, 12 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்துள்ளது.
இந்நிலையில் இந்த ஆட்டம் முடிந்தப்பின் பேசிய ரோஹித் சர்மா, “ஜடேஜா மற்றும் அஸ்வினுக்கு தங்களின் வேலை என்ன என்பது நன்றாக தெரியும். ஒவ்வொரு முறையும் அவர்கள் பேட்டிங் செய்யும்போது, அவர்கள் வெற்றிக்கு உதவ வேண்டும் என நினைப்பது தவறு. இதுவரை அவர்கள் என்ன செய்திருக்கிறார்கள் என்பது அவர்களுக்கு தெரியும், அவர்கள் மீது உள்ள எதிர்பார்ப்பு குறித்தும் அவர்கள் அறிவார்கள். கடந்த 12 வருட வெற்றி பயணத்தில் அவர்களுக்கு முக்கிய பங்கு உண்டு. அஸ்வின், ஜடேஜாவுக்கும் சில மோசமான ஆட்டங்கள் அமையும்” என்று தெரிவித்துள்ளார்.