உங்களுடன் இணைந்து வேலை பார்த்தது என் அதிர்ஷ்டம்: டிராவிட் குறித்து ரோஹித்

"என்னுடைய குழந்தை பருவத்தில், பல கோடி ரசிகர்களைப் போல நானும் உங்களை கண்டு வியந்தேன்".
டிராவிட் குறித்து ரோஹித்
டிராவிட் குறித்து ரோஹித் @rohitsharma45

நீங்கள் என்னுடைய நம்பிக்கை, பயிற்சியாளர் மற்றும் நண்பர் என்று ரோஹித் சர்மா டிராவிடைப் பாராட்டியுள்ளார்.

பார்படாஸில் கடந்த ஜூன் 29 அன்று நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதிச் சுற்றில் தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது இந்திய அணி.

இதன் மூலம் 17 ஆண்டுகளுக்கு பிறகு டி20 உலகக் கோப்பையையும், 13 ஆண்டுகளுக்கு பிறகு உலகக் கோப்பையையும் வென்று ரசிகர்களின் ஏக்கத்தைத் தீர்த்தது. இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிடின் பதவி காலம் உலகக் கோப்பை வெற்றியுடன் முடிவடைந்தது.

இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டிராவிடைப் பாராட்டி தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

ரோஹித் கூறியதாவது:

“உங்களைப் பற்றி எழுத சரியான வார்த்தைகளைத் தேடிக்கொண்டிருக்கிறேன். இந்த முயற்சியில் அதனைச் சரியாக செய்திருக்கிறேனா என்று தெரியவில்லை. என்னுடைய குழந்தை பருவத்தில், பல கோடி ரசிகர்களைப் போல நானும் உங்களை கண்டு வியந்தேன். ஆனால் உங்களுடன் இணைந்து வேலைப் பார்த்ததால் நான் பாக்கியசாலியாக உணர்கிறேன்.

நீங்கள் கிரிக்கெட்டின் மகத்தான வீரர், இருப்பினும் உங்களது சாதனைகளையும், பாராட்டுகளையும் விட்டுவிட்டு ஒரு பயிற்சியாளராக வந்து எங்களுக்கு மிகவும் ஆறுதலாக இருந்தீர்கள். உங்களிடம் எதை பற்றி வேண்டுமானாலும் பேசலாம். உங்களிடம் இருந்து நிறைய விஷயங்களைக் கற்றுக் கொண்டேன். பணியிடத்தில் நீங்கள் என் மனைவியாக இருப்பதாக என் மனைவி குறிப்பிடுவார். அவ்வாறு உங்களை அழைப்பதும் என்னுடைய அதிர்ஷ்டம் தான்.

உலகக் கோப்பையை வெல்லாதது உங்களுக்கு ஒரு குறையாக இருந்தது. ஆனால், அதனை நாம் சேர்ந்து சாதித்து விட்டோம். உங்களை உரிமையுடன் என்னுடைய நம்பிக்கை, பயிற்சியாளர் மற்றும் நண்பர் என்று அழைப்பேன்” என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in