
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த ஆட்டம் முடிந்த பிறகு ஐசிசி நடுவர்கள் நடுநிலையாக இருக்க வேண்டும் என ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
டெஸ்ட் வரலாற்றில் மிகவும் குறைந்த பந்துகளில் முடிவடைந்த டெஸ்ட் இதுதான். 642 பந்துகள் மட்டுமே வீசப்பட்ட இந்த டெஸ்ட் முடிந்த பிறகு ரோஹித் சர்மா பேசியதாவது:
“இந்திய ஆடுகளங்களை குறையாக பேசுபவர்கள் அமைதியாக இருக்கும் பட்சத்தில் இது போன்ற ஆடுகளங்களில் விளையாடுவதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. இங்கு விளையாட வந்த போது அனைவரும் இது சவாலாக இருக்கும் என்றனர். அதே போல் சவாலாக தான் இருந்தது. இந்தியாவிலும் அதே நிலை தான். இந்த ஆடுகளங்களில் நடந்தது போல் இந்தியாவில் முதல் நாளிலே நடக்கும். பந்து நன்றாக திரும்பினால் உடனே அதனை குறையாக பேசுவார்கள்".
“ஆடுகளங்களை மதிப்பிடும் போது நடுவர்கள் நடுநிலையாக இருக்க வேண்டும். உலகக் கோப்பை இறுதி ஆட்டம் நடந்த ஆடுகளத்தை சராசரி என எவ்வாறு மதிப்பிட்டார்கள் என தெரியவில்லை. அதனை தெரிந்துக்கொள்ள விரும்புகிறேன். எனவே ஐசிசி நடுவர்கள் கண்களை திறந்துக்கொண்டு ஆடுகளங்களை மதிப்பிட வேண்டும். அவ்வாறு பார்த்து தாங்கள் பார்த்ததை வைத்து மதிப்பிட வேண்டும், ஆட்டம் நடக்கும் நாடுகளை பார்த்து மதிப்பிடக்கூடாது” என்றார்.