ரோஹித், கில் சதம்: 2-வது நாளில் இந்தியா 473/8 ரன்கள்

தரம்சாலா டெஸ்டில் 2-வது நாளன்று இந்தியா சிறப்பாக பேட்டிங் செய்து வலுவான நிலையை அடைந்துள்ளது.
ரோஹித் சர்மா, கில்
ரோஹித் சர்மா, கில்ANI

தரம்சாலா டெஸ்டில் 2-வது நாளன்று இந்தியா சிறப்பாக பேட்டிங் செய்து வலுவான நிலையை அடைந்துள்ளது.

முதல் நாளில் இந்தியப் பந்துவீச்சாளர்கள் நன்குப் பந்துவீசி இங்கிலாந்து அணியை 218 ரன்களுக்குக் கட்டுப்படுத்தினார்கள். 2-வது நாளில் இந்திய பேட்டர்கள் பொறுப்புடனும் வேகமாக ரன்கள் எடுத்தும் தங்கள் திறமையை வெளிப்படுத்தினார்கள்.

ஷுப்மன் கில் 110, ரோஹித் சர்மா 103, படிக்கல் 65, ஜெயிஸ்வால் 57, சர்ஃபராஸ் கான் 56 ரன்கள் எடுத்து இந்திய அணி பெரிய ஸ்கோரை எடுக்க உதவினார்கள்.

முதல் நாள் முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 30 ஓவர்களில் 135 ரன்கள் எடுத்திருந்தது. ரோஹித் சர்மா 52, கில் 26 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். இன்று இருவருமே சிறப்பாக விளையாடி சதமெடுத்தார்கள். ரோஹித் சர்மா 154 பந்துகளில் 12-வது டெஸ்ட் சதத்தையும் ஷுப்மன் கில் 137 பந்துகளில் 4-வது டெஸ்ட் சதத்தையும் எடுத்தார்கள். சதமடித்த பிறகு இருவரும் ஆட்டமிழந்தார்கள். இதன்பிறகு சர்ஃபராஸ் கானும் அறிமுக வீரர் படிக்கலும் சிறப்பாக விளையாடி அரை சதமெடுத்து இந்தியாவின் ஸ்கோரை மேலும் உயர்த்தினார்கள். சர்ஃபராஸ் கான் 56 ரன்களிலும் படிக்கல் 65 ரன்களிலும் ஆட்டமிழந்தார்கள்.

2-வது நாள் முடிவில் இந்திய அணி 120 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 473 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது. இதனால் முதல் இன்னிங்ஸில் இந்தியா 2 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 255 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. குல்தீப் யாதவ் 27, பும்ரா 19 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in