இந்திய ஆல்-ரவுண்டர் ரிஷி தவன் ஓய்வு

வெள்ளைப் பந்து கிரிக்கெட்டிலிருந்து மட்டும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள ரிஷி தவன், ரஞ்சி கோப்பைப் போட்டியில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய ஆல்-ரவுண்டர் ரிஷி தவன் ஓய்வு
ANI
1 min read

இந்திய ஆல்-ரவுண்டர் ரிஷி தவன் இந்திய கிரிக்கெட்டில் ஒருநாள்/லிஸ்ட் ஏ மற்றும் டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

விஜய் ஹசாரே கோப்பைப் போட்டியின் குரூப் பிரிவு ஆட்டங்கள் நிறைவடைந்த நிலையில், ரிஷி தவன் ஓய்வு முடிவை வெளியிட்டுள்ளார்.

34 வயது ரிஷி தவன் 2016-ல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் அறிமுகமானார். தோனி தலைமையிலான அணியில் கடைசி மூன்று ஒருநாள் ஆட்டங்களில் விளையாடிய ரிஷி தவன், கடைசி ஆட்டத்தில் மட்டும் 1 விக்கெட் வீழ்த்தினார், அதுவும் 74 ரன்கள் கொடுத்து. பேட்டிங்கில் இரு இன்னிங்ஸில் பின்வரிசையில் களமிறங்கி மொத்தம் 12 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

தொடர்ந்து, இதே ஆண்டில் ஜிம்பாப்வே பயணத்தின்போது தோனி தலைமையில் உனாட்கட், கேஎல் ராகுல், மன்தீப் சிங், சஹல் ஆகியோருடன் சர்வதேச டி20யில் அறிமுகமானார். பந்துவீச்சில் 4 ஓவர்களில் 42 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் எடுத்தார். இதுவே இவருடையக் கடைசி சர்வதேச டி20யாக அமைந்தது.

ஐபிஎல் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப், மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்காக விளையாடியுள்ளார்.

2021-22-ல் ஹிமாச்சலப் பிரதேசம் முதன்முறையாக விஜய் ஹசாரோ கோப்பையை வென்றது. அப்போது அணியை வழிநடத்தியவர் ரிஷி தவன். இதே பருவத்தில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் மற்றும் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்தார். விஜய் ஹசாரே கோப்பைப் போட்டியில் ஒரு பருவத்தில் இரு பட்டியலிலும் முதல் 5 இடங்களுக்குள் வந்த முதல் வீரர் என்ற சாதனையையும் இவர் படைத்தார்.

ரஞ்சி கோப்பையில் பி பிரிவில் இடம்பெற்றுள்ள ஹிமாச்சலப் பிரதேசம் தற்போது 2-வது இடத்தில் உள்ளது. காலிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெறும் முனைப்பில் ஹிமாச்சலப் பிரதேசம் உள்ளது. இந்தப் பருவத்தில் ஹிமாச்சலப் பிரதேசத்துக்காக 5 ஆட்டங்களிலும் விளையாடியுள்ள ரிஷி தவன் 79.4 சராசரியில் 397 ரன்கள் குவித்துள்ளார். பந்துவீச்சில் 28.45 சராசரியில் 11 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். வெள்ளைப் பந்து கிரிக்கெட்டிலிருந்து மட்டும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள ரிஷி தவன், ரஞ்சியில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

லிஸ்ட் ஏ கிரிக்கெட்

  • ஆட்டங்கள் - 134

  • ரன்கள் - 2,906

  • பேட்டிங் சராசரி - 38.23

  • விக்கெட்டுகள் - 186

  • பந்துவீச்சு சராசரி - 29.74

டி20

  • ஆட்டங்கள் - 135

  • ரன்கள் - 1,740

  • ஸ்டிரைக் ரேட் - 121.33

  • விக்கெட்டுகள் - 118

  • எகானமி - 7.06

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in