வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்டில் வங்கதேச அணிக்கு ஃபீல்டிங் அறிவுரை வழங்கியது குறித்து விளக்கம் அளித்துள்ளார் ரிஷப் பந்த்.
இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 2 டெஸ்டுகளிலும் 3 டி20 ஆட்டங்களிலும் விளையாடுகிறது. முதல் டெஸ்டில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இத்தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இதைத் தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் செப்டம்பர் 27 அன்று கான்பூரில் தொடங்குகிறது.
முன்னதாக முதல் டெஸ்டில் ரிஷப் பந்த் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது அவர் எதிரணி வீரர்களுக்கு ஃபீல்டிங் அறிவுரை வழங்கியது இணையத்தில் பேசுபொருளாக மாறியது.
மிட் விக்கெட்டில் எந்த வீரரும் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டி அங்கு ஒரு ஃபீல்டரை நிற்க வைத்தார் ரிஷப் பந்த். இந்நிலையில் இது குறித்து பேசிய அவர், “கிரிக்கெட்டின் தரம் உயர வேண்டும். எங்கு விளையாடினாலும் கிரிக்கெட் குறித்த புரிதல் முன்னேற வேண்டும். அதனால் தான் அங்கு ஃபீல்டரை நிற்கச் சொல்லி எதிரணிக்கு அறிவுரை வழங்கினேன்” என்று தெரிவித்துள்ளார்.
2022-ல் தனக்கு ஏற்பட்ட விபத்துக்கு பிறகு, மீண்டும் அணியில் இடம்பெற்ற ரிஷப் பந்த் முதல் டெஸ்டில் சதமடித்து அசத்தினார்.