‘காபா’ டெஸ்டில் விளையாடியதை என் வாழ்நாளில் மறக்க முடியாது என்று இந்திய வீரர் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார்.
பார்டர் காவஸ்கர் 2020 - 2021 தொடரின் 4-வது ஆட்டத்தில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, அத்தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று சாதனை படைத்தது. 4-வது டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற, ரிஷப் பந்த் முக்கிய பங்கு வகித்தார். கடைசி நாள் ஆட்டத்தில் அதிரடியாக விளையாடி ஆட்டமிழக்காமல் 89 ரன்கள் எடுத்தார். பிரிஸ்பேன் நகரில் உள்ள காபா மைதானத்தில் நடைபெற்ற இந்த டெஸ்டை, எந்த இந்திய ரசிகராலும் மறக்கு முடியாது.
இந்நிலையில் இந்த டெஸ்ட் குறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் பேசிய ரிஷப் பந்த், “என்னுடைய சிறந்த ஆட்டத்தை நான் எப்போதும் வெளிப்படுத்துகிறேன். ஆனால், ஒரு சில ஆட்டங்களில் நாம் விளையாடியது வாழ்நாள் முழுவதும் நினைவில் இருக்கும். அப்படி ஒன்று தான் காபா டெஸ்ட். அதன் முக்கியத்துவம் எனக்கு அப்போது புரியவில்லை.
ரோஹித் சர்மா என்னிடம், “நீங்கள் என்ன செய்தீர்கள் என்பது குறித்து உங்களுக்கு எதுவும் தெரியவில்லை, வருங்காலத்தில் புரியும் என்றார். இன்று ஒவ்வொருவரும் அந்த ஆட்டத்தை பற்றி பேசும்போது, அது எவ்வளவு முக்கியமானது என்று புரிகிறது.
பொதுவாக, ஆஸ்திரேலிய அணி எதிரணிக்கு மிகவும் நெருக்கடி தருவார்கள், மிகவும் ஆக்ரோஷமாக விளையாடுவார்கள். என்னை பொறுத்தவரை நான் முதலில் யாருடனும் மோதமாட்டேன், ஆனால் என்னிடம் யாராவது மோதினால் அதில் இருந்து பின்வாங்கமாட்டேன். ஆஸ்திரேலிய அணியுடன் விளையாடும்போது இப்படிப்பட்ட மனநிலையுடன் விளையாட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.