
லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டனாக ரிஷப் பந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.
லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ் கேப்டனாக இருந்த கேஎல் ராகுல் ஐபிஎல் ஏலத்துக்கு முன்பு விடுவிக்கப்பட்டார். நிகோலஸ் பூரன், ரவி பிஷ்னாய், மயங்க் யாதவ், ஆயுஷ் பதோனி மற்றும் மோசின் கான் ஆகியோர் மட்டுமே தக்கவைக்கப்பட்டார்கள்.
இதனால், ஐபிஎல் மெகா ஏலத்தில் கேப்டனுக்கான திறன்களைக் கொண்ட வீரர் ஒருவரைத் தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் லக்னௌ அணிக்கு இருந்தது. தில்லி அணியால் விடுவிக்கப்பட்ட ரிஷப் பந்த் ஏலத்தில் பங்கெடுத்தார். லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி இவரை ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக தொகைக்கு (ரூ. 27 கோடி) ஏலத்தில் எடுத்தது.
ரிஷப் பந்த் தற்போது லக்னௌ அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் போட்டியில் லக்னௌ அறிமுகமானதிலிருந்து முதல் மூன்று பருவங்களில் கேஎல் ராகுல் அணியை வழிநடத்தினார். முதலிரு ஆண்டுகளில் லக்னௌ பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றது. கடந்த ஐபிஎல் பருவத்தின்போது பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழையும் வாய்ப்பை இழந்தது லக்னௌ.
லக்னௌ அணியை இதுவரை கேஎல் ராகுல், நிகோலஸ் பூரன் மற்றும் கிருனாள் பாண்டியா ஆகியோர் வழிநடத்தியுள்ளார்கள். அந்த அணியை வழிநடத்தப்போகும் நான்காவது கேப்டன் ரிஷப் பந்த்.
2016 முதல் தில்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடி வந்த ரிஷப் பந்த் 2021-ல் ஷ்ரேயஸ் ஐயருக்கு காயம் ஏற்பட்டபோது, கேப்டனாக நியமிக்கப்பட்டார். 2022 ஐபிஎல் போட்டியிலும் தில்லி கேப்டனாக தொடர்ந்தார். கார் விபத்தில் சிக்கியதைத் தொடர்ந்து, 2023 ஐபிஎல் போட்டியில் அவர் விளையாடவில்லை. 2024 ஐபிஎல் போட்டியில் தில்லி கேப்டனாக மீண்டும் அணிக்குள் நுழைந்தார்.
ஐபிஎல் போட்டியில் இவருடையச் செயல்பாடு தேர்வுக் குழுவைக் கவர, டி20 உலகக் கோப்பையில் ரிஷப் பந்த் சேர்க்கப்பட்டார். இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்றது.
இதுவரை 111 ஐபிஎல் ஆட்டங்களில் விளையாடியுள்ள ரிஷப் பந்த் 3,284 ரன்கள் குவித்துள்ளார்.