453 நாள்களுக்குப் பிறகு மீண்டும் ரிஷப் பந்த்!

13 பந்துகளை எதிர்கொண்டு 2 பவுண்டரிகள் உள்பட 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
453 நாள்களுக்குப் பிறகு மீண்டும் ரிஷப் பந்த்!
ANI

இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் 453 நாள்களுக்குப் பிறகு இன்று தில்லி கேபிடல்ஸ் அணிக்காக மீண்டும் களத்துக்குத் திரும்பியுள்ளார்.

ரிஷப் பந்த் கடந்த டிசம்பர் 30, 2022-ல் மிக மோசமான கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். மீண்டும் பழைய நிலையை அடைய அவருக்குப் பல்வேறு அறுவைச் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. அவர் படுக்கையிலிருந்து எழுந்து நடப்பதே தொடக்கத்தில் பெரும் சவாலாக இருந்தது. படிப்படியாக காயத்திலிருந்து மீளத் தொடங்கிய ரிஷப் பந்த், கடந்தாண்டு பெங்களூருவிலுள்ள தேசிய கிரிக்கெட் அகாடெமிக்குச் சென்று, களத்துக்குத் திரும்ப தேவையான பயிற்சிகளை மேற்கொள்ளத் தொடங்கினார்.

கார் விபத்துக்குப் பிறகு எவ்வித தொழில்முறை கிரிக்கெட்டிலும் விளையாடாத ரிஷப் பந்த், ஐபிஎல் போட்டிக்குத் திரும்புவார் என தில்லி கேபிடல்ஸ் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, ரிஷப் பந்த் முழு உடற்தகுதியை அடைந்துவிட்டதாக பிசிசிஐ கடந்த 12-ல் அறிவித்தது.

ஐபிஎல் போட்டியில் பந்த் விக்கெட் கீப்பிங் செய்தால், டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறலாம் என பிசிசிஐ செயலர் ஜெய் ஷா அறிவித்திருந்தார். ஆனால் விக்கெட் கீப்பர், பேட்டராக செயல்படுவதற்கான முழு உடற்தகுதியை பந்த் அடைந்துவிட்டதாகவே பிசிசிஐ தரப்பில் சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், நடப்பு ஐபிஎல் பருவத்தின் இரண்டாவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ், தில்லி கேபிடல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. தில்லி அணியை ரிஷப் பந்த் வழிநடத்தி வருகிறார்.

டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் ஷிகர் தவன் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட் செய்த தில்லி கேபிடல்ஸ் அணியில் ரிஷப் பந்த் 4-வது பேட்டராக களமிறங்கினார். 453 நாள்களுக்குப் பிறகு மீண்டும் தொழில்முறை கிரிக்கெட்டில் களமிறங்கிய பந்த் 13 பந்துகளை எதிர்கொண்டு 2 பவுண்டரிகள் உள்பட 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதைத் தொடர்ந்து, கீப்பிங்கும் செய்கிறார் ரிஷப் பந்த்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in