நியூசிலாந்துக்கு எதிரான பெங்களூரு டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் ரிஷப் பந்த் 99 ரன்களுக்கு ஆட்டமிழந்து சதத்தைத் தவறவிட்டார்.
அதிரடியான ஆட்டத்தால் இந்திய அணியில் இடம்பிடித்த ரிஷப் பந்த், டெஸ்டில் தவிர்க்க முடியாத வீரராக உள்ளார். டெஸ்டில் மட்டும் இதுவரை 6 சதம், 12 அரைசதம் அடித்துள்ளார். இவர் 90-களில் ஆட்டமிழப்பது இன்றுடன் சேர்த்து 7-வது முறை. அதாவது, 12 அரைசதங்களில் 7 முறை சதத்தை நெருங்கி 90-களில் ஆட்டமிழந்துள்ளார். இந்திய வீரர்களில் சச்சின், டிராவிடுக்குப் பிறகு அதிகமுறை 90-களில் ஆட்டமிழந்தவர் ரிஷப் பந்த் தான்.
இது மட்டுமா..? 2021-ல் மறக்க முடியாத காபா டெஸ்டில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 89 ரன்கள் விளாசி இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார் ரிஷப் பந்த். இதிலும் வாய்ப்பு கிடைத்திருந்தால், ஒரு சதத்தை விளாசியிருப்பார் ரிஷப் பந்த்.
90-களைச் சுலபமாகத் தாண்டிவிடும் ரிஷப் பந்த், இவற்றை சதங்களாக மாற்றியிருந்தால், இதுவரை 13 டெஸ்ட் சதங்கள் எடுத்திருப்பார். 36 டெஸ்டுகளில் 13 சதங்கள் என்பது சாதாரணமான காரியம் அல்ல. ரோஹித் சர்மா, அஜின்க்யா ரஹானே, கேஎல் ராகுல், எம்எஸ் தோனி ஆகியோரைவிட அதிக சதங்களை அடித்த இந்திய வீரராக ரிஷப் பந்த் இருந்திருப்பார்.