
டி20 உலகக் கோப்பை இறுதிச் சுற்றில் தனக்கு காயம் ஏற்பட்டதுபோல் நடித்ததாக ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூன் 29 அன்று, பார்படாஸில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதிச் சுற்றில் தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது இந்திய அணி.
இந்த ஆட்டத்தில் 30 பந்துகளுக்கு 30 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஆட்டத்தின் வேகத்தை குறைக்க வேண்டும் என்பதற்காக ரிஷப் பந்த் செய்த ஒரு செயல் ரசிகர்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது.
முன்னதாக, ‘தி கபில் சர்மா’ நிகழ்ச்சியில் ரோஹித் சர்மா டி20 உலகக் கோப்பை இறுதிச் சுற்று குறித்து பேசுகையில், “தெ.ஆ. அணிக்கு 30 பந்துகளுக்கு 30 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஒரு சிறிய இடைவேளை இருந்தது. அப்போது ரிஷப் பந்த் ஆட்டம் தொடங்காமல் இருக்க சாமர்த்தியமாக ஒரு செயலை செய்தார். நான் ஃபீல்டர்களை சரியான இடத்தில் நிறுத்துவதில் கவனம் செலுத்தி கொண்டிருந்தேன், அப்போது திடீரென ரிஷப் பந்த் கீழே அமர்ந்துவிட்டார்.
அவருக்கு முழங்கால் காயம் இருந்ததால் பிசியோதெரபிஸ்ட் அதனை சரிபார்த்து கொண்டிருந்தார். அச்சமயத்தில் பந்தை எதிர்கொள்ள கிளாசன் தயாராக இருந்தார், ஆனால் பந்த் செய்த செயலால் ஆட்டத்தின் வேகம் சற்று குறைந்தது. நாங்கள் வெற்றி பெற இது மட்டுமே காரணம் என்று சொல்லவில்லை, ஆனால் இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்” என்று தெரிவித்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ரிஷப் பந்த், “அந்த இடைவேளைக்கு முன்பாக 2-3 ஓவர்களுக்கு அதிகமான ரன்கள் எடுக்கப்பட்டது. உலகக் கோப்பை இறுதிச் சுற்றில் விளையாடுவது போன்ற தருணம் மீண்டும் எப்போது வரும் என யோசித்து, பிசியோதெரபிஸ்டிடம் நேரத்தை வீணடிக்கச் சொன்னேன். காயம் குணமடைந்து விட்டதா என்று பிசியோதெரபிஸ்ட் என்னிடம் கேட்டார், அதற்கு நான் காயம் இருப்பதுபோல் நடித்துக் கொண்டிருப்பதாக அவரிடம் தெரிவித்தேன். சில நேரங்களில் இதுபோன்ற செயல்கள் நமக்கு சாதகமாக அமையும்” என்று தெரிவித்துள்ளார்.