இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியை நிராகரித்த ரிக்கி பாண்டிங்!

“என் குடும்பத்துடன் நான் அதிக நேரம் செலவழிக்க விரும்புகிறேன். என்னுடைய வாழ்க்கைச் சூழலுக்கு அது ஏற்றவாறு இல்லை”.
ரிக்கி பாண்டிங்
ரிக்கி பாண்டிங்ANI

இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியை நிராகரித்துவிட்டதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.

டி20 உலகக் கோப்பையுடன் தற்போதைய தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிடின் பதவிக்காலம் முடிவடைவதால் இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளரைத் தேர்வு செய்யும் விளம்பரத்தை பிசிசிஐ வெளியிட்டது. மே 27 தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கான விண்ணப்பம் அனுப்பக் கடைசித் தேதி. புதிய பயிற்சியாளரின் பதவிக்காலம் ஜூலை 2024 முதல் டிசம்பர் 2027 வரை நீடிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக நீடிக்கத் தனக்கு விருப்பமில்லை என்று ராகுல் டிராவிட் பிசிசிஐயிடம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து முன்னாள் வீரரும் கேகேஆர் அணியின் ஆலோசகருமான கெளதம் கம்பீர், ஜஸ்டின் லேங்கர், சிஎஸ்கே அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஃபிளெமிங் போன்ற பலரை பிசிசிஐ அணுகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியை நிராகரித்துவிட்டதாக தில்லி கேபிடல்ஸ் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

ஐசிசிக்கு அளித்த பேட்டியில் பாண்டிங் பேசியதாவது: “இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியில் எனக்கு விருப்பம் இருக்கிறதா? என்பது குறித்து ஐபிஎல் போட்டியின் போது என்னுடன் பேசினார்கள். தேசிய அணிக்கு பயிற்சியாளராக பணியாற்ற நான் விரும்புகிறேன், ஆனால் இந்தப் பணி, என்னுடைய வாழ்க்கைச் சூழலுக்கு ஏற்றவாறு இல்லை. என் குடும்பத்துடன் நான் அதிக நேரம் செலவழிக்க விரும்புகிறேன். இந்திய அணிக்குப் பணியாற்றினால் அதற்கு வாய்ப்பில்லை.

அதேபோல, இந்திய அணிக்கு பணியாற்றினால், ஐபிஎல் போட்டியில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்படும். தேசிய அணிக்கு பயிற்சியாளராக பணியாற்றும் போது ஆண்டில் 10 அல்லது 11 மாதங்கள் வேலை இருக்கும். இந்திய பயிற்சியாளர் பதவி குறித்து என் மகனிடம் சொன்ன போது, ‘சரியென்று சொல்லுங்கள், இந்தியாவில் சில ஆண்டுகள் இருக்கலாம்’ என்றார். அந்த அளவிற்கு இந்தியாவை எனது குடும்பத்தினர் நேசிக்கின்றனர்” என்றார்.

எனவே, தற்போதைய சூழலில் இந்த முடிவை எடுக்கமுடியாத காரணத்தால் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியை நிராகரித்துள்ளார் ரிக்கி பாண்டிங்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in