ஆசியக் கோப்பை வேண்டுமெனில்...: பிசிசிஐ-க்கு மோசின் நக்வி அனுப்பிய மின்னஞ்சல்! | Asia Cup T20 | Mohsin Naqvi |
ஆசியக் கோப்பை வேண்டுமெனில் விழா ஒன்றை நடத்தி ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம் என மோசின் நக்வி தெரிவித்துள்ளார்.
ஆசியக் கோப்பை டி20 இறுதிச் சுற்றில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் செப்டம்பர் 28 அன்று துபாயில் மோதின. இதில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆசியக் கோப்பையை வென்றது.
இருந்தபோதிலும், ஆசியக் கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மோசின் நக்வியிடமிருந்து கோப்பையைப் பெற இந்திய அணி விருப்பம் தெரிவிக்கவில்லை. இதன் காரணமாக, ஆசியக் கோப்பை இறுதிச் சுற்றில் வெற்றி பெற்றபோதிலும், இந்திய அணியிடம் கோப்பை ஒப்படைக்கப்படவில்லை. கோப்பை இல்லாமலே கோப்பையைப் பெறுவது போல இந்திய வீரர்கள் கொண்டாடினார்கள். ஆசியக் கோப்பையை இந்திய அணியிடம் வழங்காதது குறித்து ஐசிசியிடம் புகாரளிக்கவுள்ளதாக பிசிசிஐ தெரிவித்தது.
ஆசியக் கோப்பையில் இந்தியாவும் பாகிஸ்தானும் மூன்று முறை நேருக்கு நேர் மோதின. மூன்று முறையும் இரு நாட்டு வீரர்களும் கைக்குலுக்கிக் கொள்ளவில்லை. இதனால், ஆசியக் கோப்பை முழுக்க பரபரப்பாகவே இருந்தது.
மோசின் நக்வி ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக மட்டுமில்லாமல், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவராகவும் அந்நாட்டில் அமைச்சராகவும் இருப்பதால் இந்திய அணி அவரிடமிருந்து கோப்பையைப் பெற மறுத்தார்கள். ஆசியக் கோப்பையை மோசின் நக்வியே எடுத்துச் சென்றதாகவும் புகார்கள் கூறப்பட்டன. தொடர்ந்து, ஆசியக் கோப்பையை துபாய் அலுவலகத்தில் வைத்து பூட்டி வைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. மேலும் தனது அனுமதி இல்லாமல் ஆசியக் கோப்பையை யாரும் தொடக் கூடாது என்றும் யாரிடமும் வழங்கக் கூடாது என்றும் அவர் எச்சரித்துள்ளதாகக் கூறப்பட்டன.
இந்நிலையில், இந்தப் பிரச்னை தற்போது புதிய அவதாரம் எடுத்துள்ளது. மோசின் நக்வி சார்பில் பிசிசிஐ-க்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளதாக ஜியோ நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளதாகத் தெரிகிறது.
இச்செய்தியின் அடிப்படையில் பிசிசிஐ-க்கு மோசின் நக்வி அனுப்பிய மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
"உங்களுக்குக் கோப்பை வேண்டுமெனில் விழா ஒன்றை நடத்துவோம். அதில் கோப்பையைப் பெற்றுக்கொள்ளுங்கள். ஆசியக் கோப்பை இந்திய அணிக்குச் சொந்தமானது. பிசிசிஐ நிர்வாகிகள் மற்றும் எந்த வீரர்களால் பங்கேற்க முடியுமோ அவர்களைக் கொண்டு ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரிடமிருந்து கோப்பையைப் பெற்றுக்கொள்ளலாம்" என்று குறிப்பிட்டுள்ளதாகத் தெரிகிறது.
Asia Cup T20 | IND v PAK | India v Pakistan | ACC | Asian Cricket Council | Mohsin Naqvi |
