டபிள்யுபிஎல் 2024: இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்ற பெங்களூர் அணி

நாளை நடைபெறும் இறுதிச்சுற்றில் தில்லி கேபிடல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.
இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்ற பெங்களூர் அணி
இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்ற பெங்களூர் அணிANI

மும்பை அணிக்கு எதிரான எலிமினேட்டர் ஆட்டத்தில் 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றது பெங்களூர் அணி.

மகளிர் பிரீமியர் லீக் போட்டியின் எலிமினேட்டர் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற பெங்களூர் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

தொடக்கத்தில் சோஃபி டிவைன், ஸ்மிருதி மந்தனா ஆகிய இருவரும் 10 ரன்கள் எடுத்து வெளியேற, திஷா கசத் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இதனால் 23 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது பெங்களூர் அணி.

இதைத் தொடர்ந்து எலிஸ் பெரி அதிரடியாக விளையாட அவருடன் இணைந்து யாரும் பெரிய கூட்டணியை அமைக்கவில்லை. எலிஸ் பெரி ஒரு சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 50 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதன் மூலம் 20 ஓவர்களில் பெங்களூர் அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்தது. மும்பை அணியில் ஹீலி மேத்யூஸ், சிவர் பிரண்ட், சைகா இஷாக் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து விளையாடிய மும்பை அணி ஆரம்பம் முதல் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஹீலி மேத்யூஸ் 15, யாஸ்திகா பாட்டியா 19 ரன்கள் எடுத்து வெளியேற சிவர் பிரண்ட் மற்றும் கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் ஜோடி சேர்ந்தனர்.

இருவரும் அதிரடியாக விளையாடவில்லை என்பதால் அணியின் ஸ்கோரும் வேகமாக உயரவில்லை. சிவர் பிரண்ட் 4 பவுண்டரிகளுடன் 17 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதைத் தொடர்ந்து அமெலியா கெர், ஹர்மன்பிரீத் கௌர் ஜோடி 52 ரன்கள் சேர்த்த நிலையில் ஹர்மன்பிரீத் கௌர் 4 பவுண்டரிகளுடன் 30 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

இதன் பிறகு அமெலியா கெர் தனியாகப் போராட அவருடன் யாரும் நல்ல கூட்டணியை அமைக்கவில்லை. கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் மும்பை அணி 6 ரன்கள் மட்டுமே எடுத்தது. அமெலியா கெர் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

எனவே, 20 ஓவர்களில் மும்பை அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 130 ரன்கள் எடுத்து 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதன் மூலம் பெங்களூர் அணி முதன்முறையாக இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றது.

நாளை நடைபெறும் இறுதிச்சுற்றில் தில்லி கேபிடல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.

கடந்த மகளிர் பிரீமியர் லீக் போட்டியின் இறுதிச்சுற்றில் மும்பை அணி தில்லி அணியை வீழ்த்தி சாம்ப்பியன் பட்டத்தை வென்றது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in