ஈ சாலா கப் நம்தே: டபிள்யுபிஎல் கோப்பையை வென்றது ஆர்சிபி!

ரசிகர்களின் 16 வருட ஏக்கத்தை போக்கிய ஆர்சிபி மகளிர் அணி.
டபிள்யுபிஎல் கோப்பையை வென்றது ஆர்சிபி!
டபிள்யுபிஎல் கோப்பையை வென்றது ஆர்சிபி! ANI

ஆர்சிபி அணி டபிள்யுபிஎல் 2024 கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.

மகளிர் பிரீமியர் லீக் போட்டியின் இறுதிச்சுற்றில் தில்லி கேபிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் விளையாடின. அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தில்ல் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

தில்லி அணிக்கு ஷெஃபாலி வெர்மா, கேப்டன் மெக் லேனிங் ஆகியோர் ஆரம்பம் முதல் அதிரடியாக விளையாடி வேகமாக ரன்களை சேர்த்தனர். 7 ஓவர்களில் 64 ரன்களை சேர்த்த இந்த ஜோடியை சோஃபி பிரித்தார்.

ஷெஃபாலி வெர்மா 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 27 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து வெளியேற, அடுத்ததாக லேனிங்கும் 3 பவுண்டரிகளுடன் 23 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதைத் தொடர்ந்து சோஃபி, ஷ்ரேயங்கா பாட்டில் ஆகியோரின் அபாரப் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தில்லி அணி திணறியது.

இதனால் தில்லி கேபிடல்ஸ் அணி 18.3 ஓவர்களில் 113 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஷ்ரேயங்கா பாட்டில் 4 விக்கெட்டுகளையும், சோஃபி 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதன் பிறகு 114 ரன்கள் என்ற எளிதான இலக்கை நோக்கி களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு சோஃபி டிவைன், ஸ்மிருதி மந்தனா ஆகிய இருவரும் நல்ல தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். இந்த ஜோடி 49 ரன்கள் சேர்த்தது.

டிவைன் ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 27 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து வெளியேற, அடுத்ததாக எலிஸ் பெரி, மந்தனாவுடன் ஜோடி சேர்ந்தார். நிதானமாக விளையாடிய இந்த ஜோடி 15 ஓவர்களில் 82 ரன்கள் எடுத்த நிலையில் மந்தனா ஆட்டமிழந்தார். அவர் 3 பவுண்டரிகளுடன் 39 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார்.

இதன் பிறகு ரிச்சா கோஷ் - எலிஸ் பெரி கூட்டணி அமைத்து மூன்று பந்துகள் மீதமிருந்த நிலையில் இலக்கை எட்டினர். எலிஸ் பெரி 35, ரிச்சா கோஷ் 17 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் விளையாடினர். இதன் மூலம் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணி வெற்றி பெற்று முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

ஏற்கெனவே டபிள்யுபிஎல் 2023-ல் இறுதிச்சுற்றில் தோல்வியைச் சந்தித்த தில்லி அணி தொடர்ச்சியாக 2-வது முறை இறுதிச்சுற்றில் தோல்வி அடைந்துள்ளது.

இந்த வெற்றியின் மூலம் ஆர்சிபி ரசிகர்களின் 16 வருட ஏக்கத்தை போக்கியது ஆர்சிபி மகளிர் அணி. 2008 முதல் ஐபிஎல் போட்டியில் விளையாடி வரும் ஆர்சிபி அணி இதுவரை கோப்பையை வென்றதில்லை.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in