ஆர்சிபி கொண்டாட்டம்: கூட்ட நெரிசலில் 10 பேர் உயிரிழப்பு எனத் தகவல்

உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
ஆர்சிபி கொண்டாட்டம்: கூட்ட நெரிசலில் 10 பேர் உயிரிழப்பு எனத் தகவல்
படம்: https://x.com/BJP4Karnataka
1 min read

ஆர்சிபியின் வெற்றிக் கொண்டாட்டத்துக்காக சின்னசாமி மைதானத்தில் ரசிகர்கள் அதிகளவில் கூடியதால், கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

ஐபிஎல் 2025 இறுதிச் சுற்றில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு முதன்முறையாக கோப்பையை வென்றது. 18 ஆண்டுகள் காத்திருப்புக்குப் பிறகு ஐபிஎல் கோப்பையை வென்றதால், ரசிகர்கள் உற்சாக வெள்ளத்தில் இருந்தார்கள். விராட் கோலியும் இதற்காக 18 ஆண்டுகளாகக் கடுமையாகப் போராடியதால் வெற்றிக்குப் பிறகு கண்ணீர் சிந்தினார். பெங்களூருவில் இருந்தவர்கள் தீபாவளிப் பண்டிகையைப் போல உணர்வதாக இணையத்தில் பதிவிட்டு வந்தார்கள்.

வெற்றியைத் தொடர்ந்து, ரசிகர்களுடன் இணைந்து கொண்டாடுவதற்காக பெங்களூருவில் முதலில் வீரர்கள் திறந்தவெளிப் பேருந்து பேரணியை மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது. பிறகு, கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதால் அது ரத்து செய்யப்பட்டது. விதான் சௌதாவில் முதல்வர் சித்தராமையாவைச் சந்தித்த ஆர்சிபி வீரர்கள், அங்கிருந்து சின்னசாமி மைதானத்துக்கு வந்தார்கள்.

இந்த வெற்றிக் கொண்டாட்டத்துக்காக ஏராளமான ரசிகர்கள் சின்னசாமி மைதானத்தில் கூடினார்கள். இதனால், அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 10 பேர் உயிரிழந்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in