தோனியுடன் கைக்குலுக்க ஆர்சிபி வீரர்கள் தாமதித்தார்களா?: ஹர்ஷா போக்ளே கண்டனம்

நம்மிடையே இருக்கும் எதிர்ப்புணர்வு முடிவுக்கு வந்துவிட்டது, இது வெறும் ஆட்டம்தான் என்கிற யதார்த்தை உணர்த்தும் செயல்தான் இரு அணி வீரர்களும் கைக்குலுக்குவது.
கோப்புப்படம்
கோப்புப்படம்ANI

சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்றவுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வீரர்கள் எம்எஸ் தோனியுடன் கைக்குலுக்க தாமதித்ததற்கு பிரபல வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே கண்டனம் தெரிவித்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் பருவத்தின் கடைசி லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஆர்சிபி நிர்ணயித்த 219 ரன்கள் என்ற வெற்றி இலக்கை அடைய முடியாத போதிலும், 201 ரன்கள் எடுத்தால் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பைப் பெற்றுவிடலாம் என்ற நிலைதான் சிஎஸ்கேவுக்கு இருந்தது. ஆனால், சிஎஸ்கேவால் 191 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால், நெட் ரன் ரேட் அடிப்படையில் ஆர்சிபி அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது.

தொடர்ந்து 6 ஆட்டங்களில் 6 வெற்றிகளைப் பெற்று பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்ததால், ஆர்சிபி வீரர்கள் கொண்டாட்டத்தின் உச்சத்தில் இருந்தார்கள். அதுவும் சொந்த மைதானத்தில் சொந்த ரசிகர்கள் முன்னிலையில் பெற்ற மறக்க முடியாத இந்த வெற்றியை அனைவரும் கொண்டாடித் தீர்த்தார்கள்.

இந்தக் கொண்டாட்டத்தின் நடுவே, எதிரணி வீரர்களுக்குக் கைக்குலுக்க வந்த தோனி, பாதியில் திரும்பி ஓய்வறைக்குச் சென்றார். ஆர்சிபி வீரர்கள் கொண்டாடுவதற்கு நீண்ட நேரம் எடுத்துக்கொண்டதாக ஒரு தரப்பும், தோனி கைக்குலுக்காமல் சென்றதாக மற்றொரு தரப்பும் சமூக ஊடகங்களில் விவாதித்து வருகிறார்கள்.

பிரபல வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே, இந்த விவகாரத்தில் ஆர்சிபி வீரர்கள் கைக்குலுக்கியிருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

கிரிக்பஸ் நிகழ்ச்சியில் இதுகுறித்து ஹர்ஷா போக்ளே கூறியதாவது:

"உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில்கூட வென்றிருக்கலாம். வென்ற மகிழ்ச்சியில் உங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்துங்கள். ஆனால், எதிரணியுடன் கைக்குலுக்க வேண்டும். கிரிக்கெட்டில் இருக்கும் மிகச் சிறந்த விஷயமே எதிரணியுடன் கைக்குலுக்குவதுதான்.

நம்மிடையே இருக்கும் எதிர்ப்புணர்வு முடிவுக்கு வந்துவிட்டது, இது வெறும் ஆட்டம்தான் என்கிற யதார்த்தை உணர்த்தும் செயல்தான் இரு அணி வீரர்களும் கைக்குலுக்குவது. எனவே, கைக்குலுக்கிய பிறகு மீண்டும் சென்று கொண்டாடலாம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in