ஆர்சிபி அணிக்கும் விஜய் மல்லையாவுக்கும் இன்னமும் தொடர்பு உள்ளதா?

“ஆர்சிபி அணியை ஏலத்தில் வாங்கியபோது உள்ளுணர்வு சொல்லியபடி கோலியையும் தேர்வு செய்தேன். இப்போது ஐபிஎல் கோப்பையை ஆர்சிபி வெல்லும் என உள்ளுணர்வு கூறுகிறது”.
விஜய் மல்லையா
விஜய் மல்லையா@TheVijayMallya

ஆர்சிபி அணியின் முன்னாள் உரிமையாளரான விஜய் மல்லையாவுக்கு இன்னமும் ஆர்சிபி அணியுடன் தொடர்பு உள்ளதாக சிலர் நினைக்கும் நிலையில் அது உண்மையா என்பதை பார்க்கலாம்.

நடப்பு ஐபிஎல் பருவத்தில் ஆரம்பத்தில் தொடர்ந்து 6 ஆட்டங்களில் தோல்வி அடைந்து புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்த ஆர்சிபி அணி, திடீரென கடைசி 6 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று அனைவருக்கும் ஆச்சர்யம் அளித்தது ஆர்சிபி அணி. இந்நிலையில் இன்று எலிமினேட்டர் சுற்றில் ராஜஸ்தானுடன் மோதுகிறது.

2008 முதல் தற்போது வரை தொடர்ச்சியாக ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வரும் சில அணிகளில் ஆர்சிபி அணியும் ஒன்று. 2008-ல் ஆர்சிபி அணியை கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் மற்றும் யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனங்களின் தலைவரான விஜய் மல்லையா 111.6 மில்லியன் டாலர்களுக்கு வாங்கினார். யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தின் பிராண்டான ராயல் சேலஞ்சின் பெயரே அனியின் பெயராகவும் வைக்கப்பட்டது ( ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு).

இதன் பிறகு இந்திய வங்கிகளிடமிருந்து கடன் வாங்கி, அதனை திருப்பி செலுத்தாமல் பல்லாயிர கோடி கணக்கில் மோசடி செய்த விஜய் மல்லையா நாட்டை விட்டு வெளியேறி, இங்கிலாந்தில் வசித்து வந்ததாகக் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து 2016-ல் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் தலைவர் பதவியை விஜய் மல்லையா திடீரென ராஜினாமா செய்தார்.

இதன் பிறகு ஆர்சிபி அணியின் பொறுப்பாளராக ரஸ்செல் ஆடம்ஸ் இருப்பார் எனவும், அணியின் உரிமையாளர் அமைப்பில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை எனவும், மல்லையாவின் மகன் சித்தார்த் பொறுப்பு ஏற்கும் வரை, விஜய் மல்லையா ஆர்சிபி அணியின் தலைமை ஆலோசகராக இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதன் பிறகு ஆர்சிபி அணியின் தலைவராக சஞ்சீவ் சுரிவாலா செயல்பட்டார். பின்னர் 2020-ல் ஆர்சிபி அணியின் தலைவராக டியாஜியோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ஆனந்த் கிருபாலு தேர்வு செய்யப்பட்டார். தற்போது இந்த பொறுப்பு பிரத்மேஷ் மிஸ்ராவிடம் சென்றது.

யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தின் ஒரு பகுதியாக டியாஜியோ நிறுவனம் திகழ்கிறது. உலகின் பிரபலமான ஸ்காட்ச் விஸ்கி, ஓட்கா, ஜின், ரம், விஸ்கி, என 200-க்கும் மேற்பட்ட மதுபானங்கள் தயாரித்து விற்பனை செய்யும் முன்னணி நிறுவனமாக டியாஜியோ நிறுவனம் இருக்கிறது.

இந்நிலையில் 2021-ல் டியாஜியோ நிறுவனத்தின் தலைமை வணிக அதிகாரியாக செயல்பட்ட பிரத்மேஷ் மிஸ்ராவுக்கு கூடுதல் பொறுப்பாக ஆர்சிபி அணியின் தலைவர் பதவி வழங்கப்பட்டது.

1969-ல் பிறந்த இவர் தற்போது யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தின் தலைமை வணிக அதிகாரியாகவும், டியாஜியோ நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரியாகவும் செயல்பட்டு வருகிறார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in