ஆர்சிபியின் கனவு மீண்டும் தகர்ந்தது: எலிமினேட்டர் சுற்றில் ராஜஸ்தான் வெற்றி!

வருகிற 24 அன்று சென்னையில் சன்ரைசர்ஸ் - ராஜஸ்தான் அணிகள் விளையாடுகின்றன.
எலிமினேட்டர் சுற்றில் ராஜஸ்தான் வெற்றி!
எலிமினேட்டர் சுற்றில் ராஜஸ்தான் வெற்றி!ANI

ஆர்சிபி அணிக்கு எதிரான எலிமினேட்டர் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நடப்பு ஐபிஎல் பருவத்தின் எலிமினேட்டர் ஆட்டத்தில் ஆர்சிபி - ராஜஸ்தான் அணிகள் அஹமதாபாதில் விளையாடின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

சற்று அதிரடியாக தொடங்கிய கேப்டன் டு பிளெஸ்ஸி ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 14 பந்துகளில் 17 ரன்கள் எடுத்து போல்ட் பந்தில் வெளியேறினார். மறுமுனையில் அதிரடியாக விளையாடிய விராட் கோலி ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 24 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து சஹால் பந்தில் ஆட்டமிழந்தார்.

இதன் பிறகு கிரீன் - பட்டிதார் கூட்டணி அமைத்து 41 ரன்கள் சேர்க்க, கிரீன் ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 21 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்தார். அஸ்வினின் அசத்தலான பந்துவீச்சில் மேக்ஸ்வெல் முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி வெளியேறினார்.

இதன் பிறகு லாம்ரோர் - பட்டிதார் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை வேகமாக உயர்த்தினர். பட்டிதார் 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 22 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன் பிறகு தினேஷ் கார்த்திக் 11 ரன்களில் வெளியேறினார். லாம்ரோர் 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 17 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த மூன்று விக்கெட்டுகளையும் அவேஷ் கான் வீழ்த்தினார்.

அஸ்வின் 4 ஓவர்களில் 19 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். போல்ட் 4 ஓவர்களில் 16 ரன்கள் மட்டுமே கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தினார். ஆர்சிபி அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்தது.

இதைத் தொடர்ந்து விளையாடிய ராஜஸ்தான் அணிக்கு டாம் கோலர் கேட்மோர் - ஜெயிஸ்வால் நல்ல தொடக்கத்தை அமைத்து தந்தனர். கேட்மோர் 4 பவுண்டரிகளுடன் 15 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து வெளியேறினார். மறுமுனையில் ஜெயிஸ்வால் அதிரடியாக விளையாடி ரன்களை வேகமாக சேர்த்தார்.

ஜெயிஸ்வால் 8 பவுண்டரிகளுடன் 30 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து வெளியேற, அடுத்ததாக சாம்சன் 17 ரன்களில் வெளியேறினார். இதன் பிறகு ஜுரெல் எதிர்பாராத வகையில் ரன் அவுட் ஆனார். 5 ஓவர்களில் 47 ரன்கள் தேவைப்பட்டது. ரியான் பராக் - ஹெட்மயர் களத்தில் இருந்தனர்.

இருவரும் அதிரடியாக விளையாடி 45 ரன்களை சேர்த்தனர். பராக் 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 26 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதைத் தொடர்ந்து ஹெட்மயர் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 14 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

இவர்களது விக்கெட்டை சிராஜ் வீழ்த்தினார். முடிவில் பவல் ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 8 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து ஆட்டத்தை 6 பந்துகள் மீதமிருந்த நிலையில் முடித்தார். 19 ஓவர்களில் இலக்கை எட்டி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் அணி 2-வது தகுதிச் சுற்றுக்கான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணியுடன் வருகிற 24 அன்று விளையாடவுள்ளது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி இறுதிச் சுற்றில் கேகேஆர் உடன் மோதும். இந்த தோல்வியின் மூலம் ஆர்சிபி அணியின் கோப்பை கனவு தகர்ந்தது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in