பஞ்சாபை ஊதித் தள்ளி இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய ஆர்சிபி!

ஆர்சிபி 4-வது முறையாக இறுதிச் சுற்றுக்குள் நுழைந்துள்ளது.
பஞ்சாபை ஊதித் தள்ளி இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய ஆர்சிபி!
ANI
2 min read

ஐபிஎல் 2025 குவாலிஃபையர் 1-ல் பஞ்சாபை 60 பந்துகள் மீதமிருக்க மிக எளிதாக வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது ஆர்சிபி.

ஐபிஎல் 2025 குவாலிஃபையர் 1-ல் பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு முல்லாபூரில் மோதின. ஆர்சிபியின் கேப்டனாக மீண்டும் பொறுப்பேற்ற ரஜத் படிதார் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். ஆர்சிபியில் ஜோஷ் ஹேசில்வுட் அணிக்குத் திரும்பினார். பஞ்சாபில் மார்கோ யான்செனுக்குப் பதில் அஸ்மதுல்லா ஓமர்ஸாய் களமிறங்கினார்.

பஞ்சாபில் வழக்கம்போல் பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் தொடக்க பேட்டர்களாக களமிறங்கினார்கள். யஷ் தயார் வீசிய 2-வது ஓவரிலேயே பிரியான்ஷ் ஆர்யா 7 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பிரப்சிம்ரன் ஒரு சிக்ஸர், இரு பவுண்டரிகள் அடித்து அதிரடிக்கு மாற முயற்சித்தார். ஆனால், அனுபவ புவனேஷ்வர் குமார் அவரை 3-வது ஓவரில் வீழ்த்தினார். பிரப்சிம்ரன் 18 ரன்கள் எடுத்தார்.

இதன்பிறகு, ஹேசில்வுட் வந்தார். பவர்பிளேயில் இரு ஓவர்களில் ஷ்ரேயஸ் ஐயர் மற்றும் ஜோஷ் இங்லிஸ் என இரு விக்கெட்டுகளை வீழ்த்தி பஞ்சாபை கலங்கடித்தார். மார்கஸ் ஸ்டாய்னிஸ் விக்கெட்டுகள் விழுந்த நெருக்கடியை ஏற்றுக்கொள்ளாமல் பவர்பிளேயின் கடைசி ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடித்தார். 6 ஓவர்களில் பஞ்சாப் அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 48 ரன்கள் எடுத்தது.

பவர்பிளேவுக்கு பிறகு சுயாஷ் சர்மா விக்கெட்டுகளை வீழ்த்தத் தொடங்கினார். 60 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்ததால், இம்பாக்ட் வீரராக முஷீர் கானை களமிறக்கியது பஞ்சாப். முடிவு பலனளிக்கவில்லை. 3 பந்துகளில் டக் அவுட் ஆனார் முஷீர் கான். ஸ்டாய்னிஸ் 26 ரன்களுக்கு சுயாஷ் சர்மாவிடம் வீழ்ந்தார். ஓமர்ஸாய் 18 ரன்கள் எடுத்து ஹேசில்வுட்டிடம் வீழ்ந்தார். மற்ற பேட்டர்கள் எவரும் இரட்டை இலக்கத்தைத் தொடவில்லை.

விளைவு, 20 ஓவர்கள் முழுமையாக பேட் செய்யாமல் 14.1 ஓவரிலேயே 101 ரன்களுக்கு சுருண்டது பஞ்சாப். ஆர்சிபியில் ஜோஷ் ஹேசில்வுட், சுயாஷ் சர்மா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். யஷ் தயல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். புவனேஷ்வர் குமார் மற்றும் ரொமாரியோ ஷெப்பெர்ட் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினார்கள்.

102 ரன்கள் என்ற மிக எளிதான இலக்கை நோக்கி ஆர்சிபி களமிறங்கியது. ஃபில் சால்ட் மற்றும் விராட் கோலி முதலிரு ஓவர்களில் தலா 1 பவுண்டரி அடித்து நல்ல தொடக்கம் தந்தார்கள். மூன்றாவது ஓவரில் சால்ட் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி அடித்தார். 3 ஓவர்களில் 30 ரன்கள் என ராக்கெட் வேகத்தில் பயணித்தது.

4-வது ஓவரை வீசிய கைல் ஜேமிசன் விராட் கோலி விக்கெட்டை வீழ்த்தி ஒரு ரன் கூட கொடுக்காமல் கலக்கினார். இந்த ஒரு ஓவரில் மட்டும் தான் ஆர்சிபி அடிபணிந்து பஞ்சாப் ஆதிக்கம் செலுத்தியது. அடுத்த ஓவரிலிருந்து ஃபில் சால்ட் பவுண்டரிகளாக அடிக்கத் தொடங்கினார். குறிப்பாக, ஜேமிசன் வீசிய பவர்பிளேயின் கடைசி ஓவரில் மயங்க் அகர்வால் 1 பவுண்டரி மற்றும் சால்ட் தலா இரு பவுண்டரி மற்றும் 1 சிக்ஸர் விளாச ஆர்சிபி 21 ரன்கள் எடுத்தது. 6 ஓவர்களில் 61 ரன்கள் எடுத்தது ஆர்சிபி.

இம்பாக்ட் வீரராக வந்த முஷீர் கான் 19 ரன்கள் எடுத்த மயங்க் அகர்வால் விக்கெட்டை வீழ்த்தினார். ஆனால், இது ஆட்டத்தில் எந்த இம்பாக்ட்டையும் ஏற்படுத்தவில்லை. ஃபில் சால்ட் 23 பந்துகளில் அரை சதம் அடித்தார். ரஜத் படிதார் வந்த வேகத்தில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடித்து ஆர்சிபியின் வெற்றியை உறுதி செய்தார்.

10 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 106 ரன்கள் எடுத்த ஆர்சிபி 10 ஓவர்கள் மீதமிருக்க 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று இறுதிச் சுற்றுக்குள் நுழைந்தது. சால்ட் 27 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆட்டநாயகன் விருதை சுயாஷ் சர்மா வென்றார்.

2011-ல் பிளே ஆஃப் சுற்று அறிமுகம் செய்யப்பட்டவுடன் புள்ளிகள் பட்டியலில் 2-வது இடம் பிடித்த அணிகள் இறுதிச் சுற்றுக்குள் நுழைந்துள்ளன. இந்த மரபையே ஆர்சிபியும் இன்று பின்பற்றியுள்ளது. ஆர்சிபி இறுதிச் சுற்றுக்குள் நுழைவது இது 4-வது முறை. 9 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இறுதிச் சுற்றுக்குள் நுழைந்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in