தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஆர்சிபி.
நடப்பு ஐபிஎல் பருவத்தின் இன்றைய 2-வது ஆட்டத்தில் ஆர்சிபி - தில்லி அணிகள் பெங்களூருவில் மோதின. டாஸ் வென்ற தில்லி அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. ஓர் ஆட்டத்தில் விளையாடத் ரிஷப் பந்துக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் தில்லி அணியின் கேப்டனாக அக்ஷர் படேல் செயல்பட்டார்.
சற்று அதிரடியாக விளையாடினார் விராட் கோலி. மறுமுனையில் டு பிளெஸ்ஸி 6 ரன்களில் வெளியேறினார். இதைத் தொடர்ந்து கோலி 3 சிக்ஸர்கள், 1 பவுண்டரியுடன் 13 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து வெளியேறினார். 36 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து ஆர்சிபி அணி தடுமாற, வில் ஜேக்ஸ் - பட்டிதார் சிறப்பான கூட்டணியை அமைத்தனர். இருவரும் சேர்ந்து அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் வேகமாக உயர்ந்தது.
பட்டிதார் அரை சதம் அடித்தார். 88 ரன்கள் சேர்த்த இந்த ஜோடியை ரசிக் சலாம் பிரித்தார். பட்டிதார் 3 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 32 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதன் பிறகு விக் ஜேக்ஸ் 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 29 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன் பிறகு கேம்ரூன் கிரீன் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தார். அவருடன் யாரும் பெரிய கூட்டணியை அமைக்கவில்லை.
அதிகம் எதிர்பார்த்த தினேஷ் கார்த்திக் டக் அவுட் ஆனார். ஆர்சிபி அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்தது. கிரீன் ஆட்டமிழக்காமல் 2 சிக்ஸர்கள், 1 பவுண்டரியுடன் 24 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார்.
இதைத் தொடர்ந்து விளையாடிய தில்லி அணிக்கு மிக மோசமான தொடக்கம் அமைந்தது. வார்னர் 1, போரெல் 2, மெக்கர்க் 21, குமார் குஷாகரா 2 ரன்களில் வெளியேற 30 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது தில்லி அணி. இதன் பிறகு அக்ஷர் படேல் - ஷாய் ஹோப் அருமையாக விளையாடி 50 ரன்களை சேர்த்தனர். இதன் பிறகு ஷாய் ஹோப் 23 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
ஒருபக்கம் அக்ஷர் படேல் அதிரடியாக விளையாட அவருடன் யாரும் இணைந்து நல்ல கூட்டணியை அமைத்து தரவில்லை. கேப்டன் என்ற முறையில் அக்ஷர் படேல் தனது கடமையை சரியாக செய்து அரை சதம் அடித்தார். அதிகம் எதிர்பார்த்த ஸ்டப்ஸ் 3 ரன்களில் வெளியேற, 3 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 39 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து அக்ஷர் படேலும் ஆட்டமிழந்தார்.
இதைத் தொடர்ந்து தில்லி அணி 140 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 47 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஆர்சிபி அணியில் யஷ் தயால் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடர்ச்சியாக 5-வது வெற்றியை பெற்று புள்ளிகள் பட்டியலில் 5-வது இடத்துக்கு முன்னேறியது ஆர்சிபி. தில்லி அணி 12 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் உள்ளது.