ஆர்சிபியிடம் தோற்று பிளேஆஃப் வாய்ப்பை இழந்த பஞ்சாப் அணி!

தொடர்ச்சியாக 4 ஆட்டங்களில் வெற்றி பெற்று பிளேஅஃப் வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது ஆர்சிபி.
ஆர்சிபியிடம் தோற்று பிளேஆஃப் வாய்ப்பை இழந்த பஞ்சாப் அணி!
ஆர்சிபியிடம் தோற்று பிளேஆஃப் வாய்ப்பை இழந்த பஞ்சாப் அணி!ANI

பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஆர்சிபி.

நடப்பு ஐபிஎல் பருவத்தின் இன்றைய ஆட்டத்தில் ஆர்சிபி - பஞ்சாப் அணிகள் தரம்சாலாவில் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

இந்த ஆட்டத்தில் தோல்வி அடையும் அணி பிளேஆஃப் வாய்ப்பை இழக்கும் என்ற நெருக்கடியில் இவ்விரு அணிகளும் விளையாடின.

ஆர்சிபி அணிக்கு நல்ல தொடக்கம் அமையவில்லை. கேப்டன் டு பிளெஸ்ஸி 9 ரன்களிலும், வில் ஜேக்ஸ் 12 ரன்களிலும் வெளியேறினர். தனது முதல் ஐபிஎல் ஆட்டத்தில் விளையாடிய கவேரப்பா இவர்களின் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். பவர் பிளே முடிவில் ஆர்சிபி அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 56 ரன்கள் எடுத்தது. முதல் 3 ஓவர்களை வீசி 20 ரன்கள் மட்டுமே கொடுத்த கவேரப்பா தனது கடைசி ஓவரில் 16 ரன்கள் கொடுத்தார்.

கோலி - பட்டிதார் கூட்டணி அமைத்து ரன்களை வேகமாக சேர்த்தனர். இந்த கூட்டணியை பிரிக்க முடியாமல் பஞ்சாப் பந்துவீச்சாளர்கள் திணறினர். 9-வது ஓவரில் 100 ரன்களை கடந்தது ஆர்சிபி அணி. அதிரடியாக விளையாடிய பட்டிதார் அரை சதம் அடித்தார். இதன் பிறகு 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 23 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 10 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி அணி 119 ரன்கள் எடுத்தது. இதன் பிறகு மழை குறுக்கிட்டது.

மீண்டும் ஆட்டம் தொடங்கியவுடன் கோலி சிறப்பாக விளையாடினார். அரை சதம் அடித்த கோலி கேம்ரூன் கிரீனுடன் இணைந்து அதிரடியாக விளையாடினார். இருவரும் சேர்ந்து 92 ரன்கள் சேர்த்தனர். கோலி 6 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 47 பந்துகளில் 92 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

பின்னர், 1 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 27 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து கிரீனும் வெளியேற 20 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 241 ரன்கள் குவித்தது. பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக ஹர்ஷல் படேல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதைத் தொடர்ந்து விளையாடிய பஞ்சாப் அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. பிரப்சிம்ரன் சிங் 6 ரன்கள் எடுத்து ஸ்வப்னில் சிங் பந்தில் வெளியேறினார். இதன் பிறகு பேர்ஸ்டோ மற்றும் ரிலீ ரூசோவும் அதிரடியாக விளையாடினர். பேர்ஸ்டோ 16 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

இதைத் தொடர்ந்து ரூசோவ் அரை சதம் அடித்து அசத்தினார். 3 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 27 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து ரூசோவ் ஆட்டமிழக்க அடுத்து வந்த ஜிதேஷ் சர்மா 5 ரன்களிலும், லிவிங்ஸ்டன் ரன் எதுவும் எடுக்காமலும் வெளியேறினர். இதைத் தொடர்ந்து ஷஷாங் சிங் அதிரடியால் சரிவிலிருந்து மீண்டது பஞ்சாப் அணி. ஆனால். அவர் எதிர்பாராத வகையில் ரன் அவுட் ஆனார். 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 19 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து ஷஷாங் சிங் ஆட்டமிழந்தார்.

6 ஓவர்களில் 89 ரன்கள் தேவைப்பட்டது. அதிகம் எதிர்பார்த்த அஷுதோஷ் சர்மா 8 ரன்களில் வெளியேற, ஆட்டம் முழுமையாக ஆர்சிபி பக்கம் திரும்பியது. பஞ்சாப் அணி 181 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 60 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து பிளேஆஃப் வாய்ப்பையும் இழந்தது. ஆர்சிபி அணியில் சிராஜ் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்த வெற்றியின் மூலம் ஆர்சிபி அணி 10 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 7-வது இடத்துக்கு முன்னேறி பிளேஅஃப் வாய்ப்பையும் தக்கவைத்துக் கொண்டது. தொடர்ச்சியாக 6 ஆட்டங்களில் தோல்வியடைந்த ஆர்சிபி அணி தற்போது தொடர்ச்சியாக 4 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in