குஜராத் டைடன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நடப்பு ஐபிஎல் பருவத்தின் இன்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைடன்ஸ் மோதின. டாஸ் வென்ற டு பிளெஸ்ஸி பந்துவீச்சைத் தேர்வு செய்தார். முதல் ஓவரை வீசிய ஸ்வப்னில் சிங் 1 ரன் மட்டுமே கொடுத்தார். இரண்டாவது ஓவரை சிராஜ், ரித்திமான் சஹாவை வீழ்த்தினார். தனது அடுத்த ஓவரில் கேப்டன் ஷுப்மன் கில்லையும் வீழ்த்தினார் சிராஜ். காப்பாற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சாய் சுதர்சனும், பவர்பிளேயில் கிரீன் பந்தில் ஆட்டமிழந்தார். விக்கெட்டுகள் விழுந்ததால், 6 ஓவர்களில் 23 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது குஜராத்.
ஷாருக் கான் மற்றும் டேவிட் மில்லர் கூட்டணி அமைத்தார்கள். ரன் ரேட்டையும் உயர்த்தினார்கள். ஓவருக்கு குறைந்தபட்சம் ஒரு பவுண்டரி மற்றும் 10-வது ஓவரிலிருந்து ஓவருக்கு குறைந்தபட்சம் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி அடித்தார்கள். இதனால், பவர்பிளேயில் 4-க்கு கீழ் இருந்த அணியின் ரன் ரேட் 12-வது ஓவரில் 7-ஐ தொட்டது.
ஆனால், மில்லர் பெரிய இன்னிங்ஸை விளையாடாமல் 30 ரன்களுக்கு கரண் சர்மா பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரிலேயே நன்றாக பேட் செய்த ஷாருக் கான் (37), கோலியின் அற்புதமான த்ரோவால் ரன் அவுட் ஆனார். இவர்கள் இருவரும் 37 பந்துகளில் 61 ரன்கள் விளாசினார்கள்.
இதன்பிறகு, ரன் ரேட்டில் மீண்டும் சரிவு ஏற்பட்டது. 15-வது ஓவரில்தான் குஜராத் 100 ரன்களை தொட்டது. கரண் சர்மா வீசிய 16-வது ஓவரில் தெவாடியா 3 பவுண்டரிகள், ஒரு சிக்ஸரை அடித்து மீண்டும் ரன் ரேட்டை உயர்த்தினார்.
18-வது ஓவரை வீசிய யஷ் தயால் ரஷித் கான் (18) மற்றும் தெவாடியாவை (35) வீழ்த்தினார். கடைசி கட்டத்தில் ரன்களை உயர்த்துவதற்கான நோக்கத்தில் விஜய் சங்கர் 18-வது ஓவரில் இம்பாக்ட் வீரராக களமிறக்கப்பட்டார். இவர் இரு பவுண்டரிகள் அடித்தார்.
வைஷாக் விஜயகுமார் வீசிய கடைசி ஓவரின் முதல் மூன்று பந்துகளில் மூன்று விக்கெட்டுகளை இழந்து ஆட்டமிழந்தது குஜராத். விஜய் சங்கர் ஸ்டிரைக்குக்கு வருவதற்காக 2-வது பந்தில் மோஹித் சர்மா ரன் அவுட் ஆனார். ஆனால், மூன்றாவது பந்தை எதிர்கொண்ட விஜய் சங்கர், சிராஜிடம் கேட்ச் ஆனார்.
19.3 ஓவர்களில் 147 ரன்களுக்கு ஆட்டமிழந்தது குஜராத்.
148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கோலியும், டு பிளெஸ்ஸியும் களமிறங்கினார்கள்.
மோஹித் சர்மா வீசிய முதல் ஓவரின் இரண்டாவது பந்தில் கோலி அற்புதமான ஒரு ஷாட் மூலம் சிக்ஸர் அடித்தார். இதே ஓவரை சிக்ஸருடன் நிறைவு செய்தார். மறுமுனையில் ஜோஷ் லிட்டில் வீசிய 2-வது ஓவரில் டு பிளெஸ்ஸி 3 பவுண்டரிகள், ஒரு சிக்ஸரை விளாசினார். இந்த இணையை இதன்பிறகு கட்டுப்படுத்த முடியவில்லை. மானவ் சுதர் என்ற அறிமுகப் பந்துவீச்சாளரை பவர்பிளேயில் அறிமுகம் செய்தார்கள். இதுவும் கைகொடுக்கவில்லை. டு பிளெஸ்ஸி ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி விளாச 12 ரன்கள் கிடைத்தன. 3.1 ஓவரிலேயே ஆர்சிபி 50 ரன்களை எட்டியது.
ஜோஷ் லிட்டில் வீசிய பவர்பிளேயின் கடைசி ஓவரிலும் டு பிளெஸ்ஸி இரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடித்தார். ஒரு வழியாக பவர்பிளே முடிவதற்கு இரு பந்துகள் மீதமிருக்க ஷார்ட் பந்தை வீசினார் லிட்டில். டு பிளெஸ்ஸி ஃபைன் லெக்கில் ஷாருக் கானிடம் கேட்ச் ஆனார். 18 பந்துகளில் அரை சதம் அடித்த டு பிளெஸ்ஸி 23 பந்துகளில் 64 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 6 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி 92 ரன்கள் எடுத்தது.
பவர்பிளே முடிந்தவுடன் நூர் அஹமது வந்தார். முதல் ஓவரிலேயே வில் ஜேக்ஸ் விக்கெட்டை வீழ்த்தினார். தொடர்ந்து பந்துவீசிய லிட்டில், ஒரே ஓவரில் ஷார்ட் பந்து மூலம் படிதார் மற்றும் மேக்ஸ்வெல்லை விக்கெட்டுகளை வீழ்த்தினார். நூர் அஹமது 9-வது ஓவரில் வெறும் 1 ரன்னை மட்டுமே கொடுத்தார்.
பவர்பிளேயில் அதகளம் செய்த ஆர்சிபி ரசிகர்கள் அடங்கிப் போனார்கள். தனது கடைசி ஓவரை வீச வந்த லிட்டில் கிரீனையும் வீழ்த்த ஆர்சிபியின் பேட்டிங் ஆட்டம் கண்டது. 10 ஓவர்களில் 112 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது.
கோலி இருக்கிறார் என்ற ரசிகர்களின் நம்பிக்கையையும் நூர் அஹமது தகர்த்தார். 11-வது ஓவரில் இவரது கூக்லியை கணிக்காமல் விளையாடிய கோலி, சஹாவின் சிறப்பான கேட்சில் ஆட்டமிழந்தார்.
6 விக்கெட்டுகளை இழந்த ஆர்சிபிக்கு இன்னும் 31 ரன்கள் தேவை. ரஷித் கான் இன்னும் ஒரு ஓவர்கூட வீசவில்லை என்ற நிலை இருந்தது.
12-வது ஓவரில் ரஷித் கான் அறிமுகப்படுத்தப்பட்டார். தினேஷ் கார்த்திக், ரஷித் கான் ஓவரை துவம்சம் செய்தார். 3 பவுண்டரிகள் அடித்து கடைசி 8 ஓவர்களில் வெற்றிக்குத் தேவையான ரன் ரேட்டை 15 ஆகக் குறைத்தார். நூர் அஹமது வீசிய அடுத்த ஓவரில் ஸ்வப்னில் சிங் இரு பவுண்டரிகள் அடித்தார். ரஷித் கான் வீசிய 14-வது ஓவரில் ஆர்சிபியின் வெற்றியை சிக்ஸர் அடித்து உறுதி செய்தார் ஸ்வப்னில் சிங்.
13.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்த ஆர்சிபி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த தினேஷ் கார்த்திக் 12 பந்துகளில் 21 ரன்களும், ஸ்வப்னில் சிங் 9 பந்துகளில் 15 ரன்களும் எடுத்தார்கள்.