சிஎஸ்கே கோட்டையில் பல வருடங்களுக்குப் பிறகு ஜெயித்த ஆர்சிபி!

கடைசி 4.4 ஓவர்களுக்கு ஆடினார் தோனி. 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் அடித்தார்.
சிஎஸ்கே கோட்டையில் பல வருடங்களுக்குப் பிறகு ஜெயித்த ஆர்சிபி!
ANI
2 min read

2008-க்குப் பிறகு சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கேவை ஜெயிக்காத ஆர்சிபி அணி நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜெயித்துவிட்டது, சேப்பாக்கத்தில் கூடியிருந்த சில ஆயிரக்கணக்கான ஆர்சிபி ரசிகர்கள் முன்னிலையில். இந்தத் திருப்பத்தை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

டாஸ் வென்ற ருதுராஜ், ஆர்சிபியை பேட்டிங் செய்ய அழைத்தபோது வரவிருந்த ஆபத்தை யாரும் எதிர்பார்க்கவில்லை.

உண்மையில் அட்டகாசமாக விளையாடியது ஆர்சிபி. எல்லா பேட்டர்களும் அதிரடியாக விளையாடுவதிலேயே குறியாக இருந்தார்கள். கோலி மட்டும் வழக்கம்போல சற்று நிதானமாக ஆடி அவர்களுக்குத் துணையாக நின்றார். பில் சால்ட் 16 பந்துகளில் 1 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 32 ரன்கள் எடுத்து தோனியின் மற்றொரு அற்புதமான ஸ்டம்பிங்கில் ஆட்டமிழந்தார். இம்பாக்ட் வீரராக 3-வது பேட்டராகக் களமிறங்கிய படிக்கல் ஆச்சர்யப்படும்படி பேட்டிங் செய்தார். 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 14 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்தார். பவர்பிளேயில் 56 ரன்கள் எடுத்தது ஆர்சிபி. அதன்பிறகும் வானவேடிக்கைகளைக் குறைத்துக்கொள்ளவில்லை.

கேப்டன் படிதார் களமிறங்கியபோது சுழற்பந்துவீச்சாளர்களை இம்முறையும் சாத்துவாரா என்கிற பயம் சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஏற்பட்டிருக்கும். வழக்கம்போல அவர் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தார். ஆனால் சிஎஸ்கே அவர் அளித்த 3 கேட்சுகளைத் தவறவிட்டது தான் ஆட்டத்தின் போக்கை மாற்றியது. 10.3 ஓவர்களில் ஆர்சிபி அணி 100 ரன்களை எடுத்திருந்தது. ரஜத் படிதார் 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 30 பந்துகளில் அரை சதம் எடுத்தார்.

இந்த ஆட்டத்திலும் நூர் அஹமது அற்புதமாகப் பந்துவீசினார். 36 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி, பர்பிள் கேப்பைக் கைப்பற்றினார். ஆனால் அஸ்வின் 2 ஓவர்களில் 22 ரன்களும் சாம் கரண் 3 ஓவர்களில் 34 ரன்களும் ஜடேஜா 3 ஓவர்களில் 37 ரன்களும் கொடுத்து ருதுராஜுக்கு அழுத்தம் ஏற்படுத்தினார்கள்.

பதிரனாவின் 19-வது ஓவரில் படிதாரும் கிருனாள் பாண்டியாவும் ஆட்டமிழந்தார்கள். அந்த ஓவரில் 1 ரன் மட்டும் கொடுத்து அசத்தினார் பதிரனா. கலில் அஹமது 4 ஓவர்களில் 28 ரன்கள் மட்டும் கொடுத்தார். ஜிதேஷ் சர்மாவின் விக்கெட்டையும் வீழ்த்தினார். கடைசி ஓவரில் டிம் டேவிட் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து ஸ்கோரை வெகுவாக உயர்த்தினார். ஆர்சிபி எடுத்த 196/7 ரன்கள் அதிகம் என்று அப்போதே தெரிந்தது.

பந்துவீச்சில் செய்த தவறுகளை சிஎஸ்கே பேட்டர்கள் சரிசெய்துவிடுவார்கள் என்கிற எதிர்பார்ப்பு ஆரம்பத்திலேயே பொய்த்துப் போனது. திரிபாதி 5 ரன்களுக்கும் கேப்டன் ருதுராஜ் ரன் எதுவும் எடுக்காமலும் ஹேசில்வுட் பந்தில் ஆட்டமிழந்தார்கள். படிதாரின் அழகான கேட்சைத் தவறவிட்ட தீபக் ஹூடா பேட்டிங்கில் 4 ரன்களுக்கு புவனேஸ்வர் பந்தில் ஆட்டமிழந்தார். பவர்பிளேயில் சிஸ்கேவின் ஸ்கோர் 30/3. இதனால் ரச்சின் ரவீந்திராவும் சாம் கரணும் நிதானமாக விளையாடினார்கள். சாம் கரண் 13 பந்துகளுக்கு 8 ரன்கள் மட்டும் எடுத்து வெளியேறினார். ரச்சின் 31 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த பிறகு ஆட்டம் அங்கேயே முடிந்தது. துபே 19 ரன்களும் ஜடேஜா 25 ரன்களும் எடுத்தது ஸ்கோரை சற்று உயர்த்தியது. இந்த ஆட்டத்தில் ஆர்சிபி 12 சிக்ஸர்கள் அடித்தது. சிஎஸ்கே 2 சிக்ஸர்கள் மட்டும். இரு அணிகளின் பேட்டிங்கும் எப்படி இருந்தது என்பதற்கு இது சிறிய உதாரணம். ஜோஷ் ஹேசில்வுட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கிருனாள் பாண்டியாவைத் தவிர மற்றவர்கள் நன்றாகப் பந்துவீசி சிஎஸ்கே ஆதிக்கம் செலுத்த விடாமல் பார்த்துக்கொண்டார்கள்.

சிஎஸ்கே தோல்வி பாதி ஓவர்களிலேயே உறுதியான பிறகு கடைசியில் தோனி எப்போது வருவார், எத்தனை ரன்கள் அடிப்பார் என்கிற எதிர்பார்ப்பு மட்டுமே மிஞ்சியது. அவரோ 9-வதாகக் களமிறங்கினார்.

கடைசி 4.4 ஓவர்களுக்கு ஆடினார் தோனி. 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் அடித்தார். சிஎஸ்கே 146 ரன்கள் மட்டும் எடுத்து 50 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றாலும் (சேப்பாக்கத்தில் சிஎஸ்கேவின் பெரிய தோல்வி) தோனி எடுத்த 30 ரன்களுக்காகச் சந்தோஷமாக வீட்டுக்குத் திரும்பியிருப்பார்கள் சிஎஸ்கே ரசிகர்கள்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in