சிஎஸ்கேவை வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்த ஆர்சிபி!

முதல் 8 ஆட்டங்களில் 7 தோல்விகளைச் சந்தித்த ஆர்சிபி, அடுத்த 6 ஆட்டங்களில் 6 வெற்றிகளைப் பெற்று பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்து சாதனை படைத்துள்ளது.
சிஎஸ்கேவை வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்த ஆர்சிபி!
ANI

சென்னை சூப்பர் கிங்ஸை 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்து சாதனை படைத்துள்ளது.

நடப்பு ஐபிஎல் பருவத்தின் மிக முக்கியமான லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பெங்களூருவில் மோதின. பிளே ஆஃப் சுற்றுக்குள் 4-வது அணியாகத் தகுதி பெற இரு அணிகளுக்கும் வாய்ப்பு இருந்தது. இதனிடையே மழையும் அச்சுறுத்தலாக இருந்தது.

தேவையான ஆட்டத்தில் டாஸில் சரியாக வென்ற ருதுராஜ் கெயிக்வாட் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். துஷார் தேஷ்பாண்டே முதல் ஓவரை சிறப்பாக வீசி 2 ரன்களை மட்டுமே கொடுத்தார். ஷார்துல் தாக்குர் வீசிய 2-வது ஓவரில் கோலி ஒரு பவுண்டரி அடிக்க, டு பிளெஸ்ஸி ஒரு பவுண்டரி ஒரு சிக்ஸர் அடித்து இன்னிங்ஸை நிறைவு செய்தார். இதே அதிரடி முனைப்புடன் தேஷ்பாண்டே வீசிய 3-வது ஓவரில் கோலி இரு சிக்ஸர்கள் அடித்தார்.

3 ஓவர்களில் 31 ரன்கள் எடுத்து சிறப்பான நிலையில் ஆர்சிபி இருந்தது. ஆனால், மழை குறுக்கிட்டு ஆட்டத்தை நிறுத்தியது.

மழை நின்றவுடன் இரவு 8.25-க்கு ஓவர்கள் எதுவும் குறைக்கப்படாமல் ஆட்டம் தொடங்கியது. இந்த இடைவெளி ஆடுகளத்தின் தன்மையை மாற்ற, சுழலர்களுக்குப் பந்து பெரிதளவில் திரும்பியது. இதனால், பவர்பிளேயின் முதல் 3 ஓவர்களில் 31 ரன்கள் எடுத்த ஆர்சிபி தொடக்க பேட்டர்களால், அடுத்த 3 ஓவர்களில் 11 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

பவர்பிளே முடிந்தவுடன் எதிர்பார்த்ததைப்போல ஜடேஜா வந்தார். ஆனால், இன்றைய நாள் ஜடேஜாவுக்கானதாக இல்லை. பந்து சுழலர்களுக்கு உதவினாலும், ஜடேஜா முதல் ஓவரில் ஒரு பவுண்டரி உள்பட 10 ரன்கள் கொடுத்தார்.

மறுமுனையில் சான்ட்னர் ரன் வேகத்தைக் கட்டுப்படுத்தினாலும், ஜடேஜா ஓவரில் ரன்கள் சென்றன. முதல் விக்கெட்டுக்கான கூட்டணி சிறப்பாக சென்றுகொண்டிருக்கும்போது சான்ட்னர் பந்தில் ஸ்லாக் ஸ்வீப் மூலம் சிக்ஸர் அடித்தார் கோலி. அடுத்த பந்திலேயே மிட்செலின் புத்திசாலித்தனமான கேட்சில் ஆட்டமிழந்தார். கோலி 29 பந்துகளில் 47 ரன்கள் எடுத்தார்.

பந்து திரும்பத் தொடங்கியவுடன் விக்கெட்டைப் பாதுகாத்து வந்த டு பிளெஸ்ஸி, கோலி விக்கெட்டுக்கு பிறகு பேட்டை சுழற்றத் தொடங்கினார். ஜடேஜா வீசிய 11-வது ஓவரில் ஒரு பவுண்டரி, இரு சிக்ஸர்கள் அடித்தார் டு பிளெஸ்ஸி. இந்தப் பருவத்தின் 4-வது அரை சதத்தையும் எட்டினார்.

பெரிய இன்னிங்ஸாக ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படிதார் அடித்த பந்து சான்ட்னர் விரலில்பட்டு, எதிர்முனையில் இருந்த ஸ்டம்பை தகர்த்தது. பந்து ஸ்டம்பை தகர்க்கும்போது, டு பிளெஸ்ஸியின் பேட் காற்றில் இருந்ததாகக் கூறி நடுவர் அவுட் கொடுத்தார். நடுவரின் முடிவுக்கு ஆர்சிபி அணி அதிர்ச்சியடைந்தது. டு பிளெஸ்ஸி 54 ரன்களுக்கு ஆட்டமிழக்கும்போது 13 ஓவர்களில் 113 ரன்கள் எடுத்திருந்தது ஆர்சிபி.

இந்த ரன் ரேட்டை அப்படியே உயர்த்தும் நோக்கத்தில் ரஜத் படிதார் மற்றும் கேம்ரூன் கிரீன் இணை அதிரடி காட்டியது. சிமர்ஜீத் சிங் ஓவரில் 19 ரன்கள். ஷார்துல் தாக்குர் ஓவரில் 17 ரன்கள். துஷார் தேஷ்பாண்டே ஓவரில் 16 ரன்கள். இடையில் தீக்‌ஷனா மட்டும் ஒரு ஓவர் வீசி 6 ரன்கள் கொடுத்தார். 17 ஓவர்களில் 171 ரன்களை எட்டியது ஆர்சிபி.

18-வது ஓவரை இரு சிக்ஸர்களுடன் தொடங்கினாலும், படிதார் விக்கெட்டை வீழ்த்தினார் ஷார்துல். படிதார் 23 பந்துகளில் 41 ரன்கள் எடுத்தார். படிதார் - கிரீன் இணை 28 பந்துகளில் 71 ரன்கள் விளாசியது.

அடுத்து வந்த தினேஷ் கார்த்திக் தேஷ்பாண்டே வீசிய 19-வது ஓவரில் சிக்ஸர், பவுண்டரி அடித்து ஆட்டமிழந்தார்.

கிளென் மேக்ஸ்வெல் வந்த வேகத்துக்கு 19-வது ஓவரின் கடைசிப் பந்தில் ஒரு பவுண்டரியும், கடைசி ஓவரில் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியும் அடித்து ஆட்டமிழந்தார். 20 ஓவர்களில் ஆர்சிபி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 218 ரன்கள் எடுத்தது.

சிஎஸ்கே வெற்றிக்கு 219 ரன்கள் தேவைப்பட்டாலும், பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதிபெற 201 ரன்கள் எடுத்தால் போதும் என்ற நிலை இருந்தது.

தொடக்க பேட்டராக களமிறங்கிய கேப்டன் ருதுராஜ் கெயிக்வாட், மேக்ஸ்வெல் வீசிய முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். யஷ் தயல் வீசிய மூன்றாவது ஓவரில் அனுபவமிக்க டேரில் மிட்செல்லும் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். முதல் மூன்று ஓவர்களுக்குள் இரு விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே தடுமாறியது.

ரஹானே வந்தவுடன் சிக்ஸர் அடித்து நெருக்கடியை சற்று தணித்தார். ரவீந்திராவும், ரஹானேவும் மேக்ஸ்வெல் ஓவரில் மட்டும் சுதாரித்து விளையாடினார்கள். யஷ் தயல் வீசிய பவர்பிளேயின் கடைசி ஓவரில் ரச்சின் ரவீந்திரா ஒரு பவுண்டரியும், ரஹானே இரு பவுண்டரிகளும் அடிக்க 6 ஓவர்களில் சிஎஸ்கே 58 ரன்களுக்கு விரைந்தது.

ஸ்வப்னில் சிங் பவர்பிளே முடிந்தவுடன் 6 ரன்கள் மட்டும் கொடுத்து ஒரு ஓவர் வீசினாலும், கரண் சர்மா ஓவரில் ரவீந்திரா ஒரு சிக்ஸரும், ரஹானே ஒரு பவுண்டரியும் அடித்தார்கள்.

சிஎஸ்கே பேட்டிங் சிறப்பாக செல்ல 10-வது ஓவரில் ஃபெர்குசனை அறிமுகப்படுத்தினார் டு பிளெஸ்ஸி. பந்தை வேகமாக வீசுவார் என்று நினைத்து ரஹானே பெரிய ஷாட்டுக்கு செல்ல, குறைவான வேகத்தில் பந்து வந்ததால் கேட்சாகி ஆட்டமிழந்தார். இவர் 22 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார். ரவீந்திரா - ரஹானே இணை 41 பந்துகளில் 66 ரன்கள் எடுத்தது.

10 மற்றும் 11-வது ஓவர்களில் மொத்தமே 6 ரன்கள் மட்டுமே சிஎஸ்கே எடுத்ததால் நெருக்கடி அதிகரிக்கத் தொடங்கியது. குறிப்பாக இம்பாக்ட் வீரராக வந்த ஷிவம் துபே தடுமாறினார்.

இந்த நிலையில், ஃபெர்குசன் பெரிய ஃபுல்டாஸ் நோ-பால் வீச ரவீந்திராவின் பேட்டில் பட்டு பந்து பவுண்டரியை அடைந்தது. ஃப்ரீ ஹிட் வாய்ப்பைப் பயன்படுத்தி அடுத்த பந்தை சிக்ஸருக்கு அனுப்பியது மட்டுமில்லாமல், மூன்றாவது பந்தையும் தேர்ட் மேன் பகுதிக்கு அனுப்பி சிக்ஸர் அடித்தார் ரச்சின் ரவீந்திரா. இதன்மூலம், அரை சதத்தையும் அவர் எட்டினார்.

ஆட்டம் மீண்டும் சிஎஸ்கே பக்கம் திரும்ப, மேக்ஸ்வெல் பந்தில் துபே கொடுத்த கேட்ச் வாய்ப்பைத் தவறவிட்டு சிராஜும் உதவினார். ஆனால், இந்த அதிர்ஷ்டம் நீடிக்கவில்லை. தவறான அழைப்பால் ரவீந்திரா (61) ரன் அவுட் ஆனார்.

டைமிங் கிடைக்காமல் திணறி வந்த துபே 15 பந்துகளில் 7 ரன்களுக்கு அடுத்த ஓவரிலேயே ஆட்டமிழந்தார்.

இதனால் ஆட்டம் ஜடேஜா, தோனி வசம் சென்றது. கடைசி 4 ஓவர்களில் வெற்றிக்குத் தேவையான ரன்கள் 81 ஆக இருந்தாலும், பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைய 63 ரன்கள் தேவைப்பட்டன.

யஷ் தயல் வீசிய 17-வது ஓவரிலும், சிராஜ் வீசிய 18-வது ஓவரிலும் 28 ரன்கள் விளாசினார்கள். கடைசி இரு ஓவர்களில் 35 ரன்கள் தேவைப்பட தோனி ஒரு பவுண்டரியும், ஜடேஜா ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸரும் அடித்தார்.

கடைசி ஓவரில் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற 17 ரன்கள் தேவைப்பட, யஷ் தயல் பந்துவீசினார். முதல் பந்தை ஃபுல்டாஸாக வீச, தோனி 110 மீட்டர் தூரத்துக்கு சிக்ஸர் அனுப்பி அதகளப்படுத்தினார்.

அடுத்த பந்தை வேகம் குறைத்து வீச, தோனி முன்கூட்டியே பேட்டை விட்டார். டீப் ஸ்கொயர் லெக்கில் கேட்ச் ஆனார். தோனி 13 பந்துகளில் 25 ரன்கள் எடுத்தார். ஷார்துல் தாக்குர் அடுத்த இரு பந்துகளில் 1 ரன் மட்டுமே எடுக்க, ஸ்டிரைக்கில் இருந்த ஜடேஜா கடைசி இரு பந்துகளில் 10 ரன்கள் அடித்தால் மட்டுமே பிளே ஆஃப் வாய்ப்பு என்ற நிலை இருந்தது. ஆனால், இரு பந்துகளையும் வைட் லைனில் வீசி ஜடேஜாவின் பேட்டில் படாதவாறு பார்த்துக் கொண்டார் தயல்.

20 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 191 ரன்கள் மட்டுமே எடுத்தது.

சிஎஸ்கேவை 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆர்சிபி 14 புள்ளிகள் பெற்று நெட் ரன் ரேட் அடிப்படையில் பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது. முதல் 8 ஆட்டங்களில் 7 தோல்விகளைச் சந்தித்து 1 வெற்றியை மட்டுமே பெற்றிருந்த ஆர்சிபி, அடுத்த 6 ஆட்டங்களில் 6 வெற்றிகளைப் பெற்று பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்து சாதனை படைத்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in