ஐபிஎல்: குஜராத் அணியை நொறுக்கிய சிஎஸ்கே!

இப்படி விளையாடுகிறார்களே, இந்த அணியை யாரால் தடுத்து நிறுத்த முடியும்?
ஐபிஎல்: குஜராத் அணியை நொறுக்கிய சிஎஸ்கே!
ANI
2 min read

கடந்த வருடம் சற்று பலவீனமான அணியாக இருந்தாலும் ஐபிஎல் கோப்பையை வென்று காண்பித்தது சிஎஸ்கே. இந்தமுறை குறைகளை எல்லாம் சரிசெய்த பீமபலம் கொண்ட அணியாக மாறியிருக்கிறது. ஐபிஎல் 2024-ல் இரண்டே ஆட்டங்களில் மற்ற அணிகள் சிஎஸ்கேவைக் கொண்டு அச்சப்படும் நிலைமை உருவாகியுள்ளது.

முதல் ஆட்டத்தில் சிஎஸ்கே சுழற்பந்து வீச்சாளர்கள் ஒரு விக்கெட்டும் எடுக்கவில்லை. இதனால் ஒரே ஒரு சுழற்பந்துவீச்சாளர், அதுவும் ஆல்ரவுண்டர் ஜடேஜாவுடன் களமிறங்கியது சிஎஸ்கே. 2010-ல் நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கியது போல தற்போதைய சேப்பாக்கம் மைதானத்தின் தன்மைக்கு ஏற்றாற்போல அணியை மாற்றியது சிஎஸ்கே. பதிரனா, முஸ்தபிஸுர், துஷார், தீபக் சஹார், ஜடேஜா என்கிற புதிய பந்துவீச்சுக் கூட்டணியை அமைத்தது.

ஆடுகளம் பேட்டர்களுக்கு ஏற்றாற்போல உள்ளது என்பதைச் சரியாகக் கணித்த சிஎஸ்கே அதற்கேற்றபடி உத்திகளை மாற்றிக்கொண்டது. டாஸ் வென்று குஜராத் பந்துவீச்சைத் தேர்வு செய்தது சிஎஸ்கேவுக்கு இன்னும் உதவியது.

பவர்பிளேயில் ரச்சின் ரவீந்திரா அடித்துக்கொண்டே இருந்தார். 20 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள் என தீப்பொறி ஆட்டத்தை வெளிப்படுத்தி ரஷித் கான் பந்தில் 46 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பவர்பிளேயில் சிஎஸ்கே 69/1.

அடுத்த 3 ஓவர்களில் சாய் கிஷோரும் ரஷித் கானும் ரன்களைக் கொஞ்சம் கட்டுப்படுத்தினார்கள். ரஹானே 12 ரன்களில் ஆட்டமிழந்தார். டுபே வந்தவுடன் இரு சிக்ஸர்களை அடித்தார். 11 ஓவர்களிலேயே சிஎஸ்கே 119 ரன்கள் எடுத்து பெரிய ஸ்கோருக்குத் தயாராக இருந்தது.

ருதுராஜ் வழக்கமான 127 ஸ்டிரைக் ரேட்டுடன் விளையாடி 46 ரன்களுக்கு 13-வது ஓவரில் ஆட்டமிழந்தார். டுபே வழக்கம்போல பெரிய சிக்ஸர்களை அடித்து மிரட்டிக் கொண்டிருந்தார். 23 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 51 ரன்கள் அடித்து ரஷித் கான் பந்தில் அவர் ஆட்டமிழந்தார். முதல்முதலாக ஐபிஎல் போட்டியில் விளையாடும் சமீர் ரிஸ்வி, ரஷித் கானின் பந்துகளில் இரு சிக்ஸர்களை வந்தவுடனே அடித்து ஆச்சர்யப்படுத்தினார். 20 ஓவர்களின் முடிவில் சிஎஸ்கே 6 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் குவித்தது. இன்றும் தோனி பேட்டிங் செய்ய முன்வரவில்லை. மிட்செல் ஆட்டமிழக்காமல் 24 ரன்கள் எடுத்தார்.

குஜராத் இன்னிங்ஸில் முதல் இரண்டரை ஓவர் வரை பெரிய பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால் ஆனால் 3-வது ஓவரில் 8 ரன்களில் சஹார் பந்தில் ஷுப்மன் கில் ஆட்டமிழந்தவுடன் ஆட்டத்தின் முடிவு தெரிய ஆரம்பித்துவிட்டது. சஹா 21 ரன்களிலும் விஜய் சங்கர் 12 ரன்களிலும் ஆட்டமிழந்தார்கள். பவர்பிளேயில் கெளரவமாக 52 ரன்கள் எடுத்திருந்தாலும் இன்று அது போதவில்லை. நடுவில் ஆட்டத்துக்குச் சம்பந்தமில்லாத ஒரு கூட்டணியை சாய் சுதர்சனும் டேவிட் மில்லரும் அமைத்தார்கள். மில்லர் 21 ரன்களிலும் சாய் சுதர்சன் 37 ரன்களிலும் ஆட்டமிழந்தார்கள். இதன்பிறகு ஆட்டம் அனைவருக்கும் தெரிந்த முடிவை நோக்கி நகர்ந்தது. குஜராத் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்து 63 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய தோல்வியைப் பெற்றது. புதிய பந்துவீச்சுக் கூட்டணியில் சஹார், முஸ்தபிஸுர். துஷார் ஆகிய மூவரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். பந்துவீச்சிலும் பங்களித்த மிட்செல் ஒரு விக்கெட்டை எடுத்தார்.

புள்ளிகள் பட்டியலில் ஜம்மென்று முதலிடத்தில் உட்கார்ந்துள்ளது சிஎஸ்கே. இப்படி விளையாடுகிறார்களே, இந்த அணியை யாரால் தடுத்து நிறுத்த முடியும்?

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in