எஸ்ஏ20 இறுதிச் சுற்றில் சன்ரைசர்ஸை வீழ்த்திய எம்ஐ அணி கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.
தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் எஸ்ஏ20 போட்டியின் இறுதிச் சுற்று வான்டெரெர்ஸில் நேற்று நடைபெற்றது. ரஷித் கான் தலைமையிலான எம்ஐ கேப் டவுன் மற்றும் எய்டன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகள் மோதின.
டாஸ் வென்ற ரஷித் கான் பேட்டிங்கை தேர்வு செய்தார். எம்ஐ அணியில் பேட்டர்கள் அனைவரும் அதிரடிக்கான முனைப்புடன் களமிறங்கி விளாசினார்கள். பெரிஸ ஸ்கோராக மாற்ற முடியாமல் போனாலும் பரவாயில்லை என பேட்டை சுழற்றிக்கொண்டே இருந்தார்கள்.
பவர்பிளேயில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 52 ரன்கள் எடுத்தது எம்ஐ அணி. அதிரடி முனைப்பு காரணமாக அந்த அணியின் எவர் ஒருவரும் 40 ரன்களை தொடவில்லை.
டெவால்ட் பிரேவிஸ் 18 பந்துகளில் 4 சிக்ஸர்களுடன் 38 ரன்கள் விளாசினார். தொடக்க பேட்டர் ரயன் ரிக்கெல்டன் 15 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார். அதிரடிக்கு நடுவே விக்கெட்டுகளை இழந்து விளையாடிய எம்ஐ அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்தது.
சன்ரைசர்ஸில் அற்புதமாகப் பந்துவீசிய ரிச்சர்ட் கிளீசன் 4 ஓவர்களில் 22 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
182 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணிக்கு பேட்டிங் கைகூடவில்லை. தொடக்க பேட்டர் டோனி டி ஸார்ஸி26 ரன்கள் எடுத்தார். டாம் அபெல் 30 ரன்கள் எடுத்தார். ஸ்டப்ஸ் 15 ரன்கள் எடுத்தார். மற்ற பேட்டர்கள் எவரும் இரட்டை இலக்கத்தில் ரன்கள் எடுக்கவில்லை. விளைவு 20 ஓவர் முழுமையாக விளையாடாமல் 105 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ககிசோ ரபாடா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற எம்ஐ கேப் டவுன் முதன்முறையாக எஸ்ஏ20 கோப்பையை வென்றது. கோப்பையை வென்றதன் மூலம், மூலம், இதுவரை பங்கெடுத்த அனைத்து டி20 லீக் போட்டிகளிலும் (ஐபிஎல், சாம்பியன்ஸ் லீக், டபிள்யுபிஎல், எஸ்ஏ20, ஐஎல்டி20, எம்எல்சி) கோப்பையை வென்று எம்ஐ அணி சாதனை படைத்துள்ளது.