உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன்பு லாராவிடம் கொடுத்த வாக்கைக் காப்பாற்றிவிட்டோம் என ரஷித் கான் பேசியுள்ளார்.
டி20 உலகக் கோப்பை கடந்த ஜூன் 1 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளன.
டி20 உலகக் கோப்பையில் முதல்முறையாக அரையிறுதிக்குத் தகுதி பெற்று சாதனை படைத்துள்ளது ஆப்கானிஸ்தான் அணி. இந்நிலையில் வங்கதேசுத்துக்கு எதிரான ஆட்டம் முடிந்தபிறகு ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ரஷித் கான், “உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன்பு எங்கள் மீது நம்பிக்கை வைத்த ஒரே நபர் லாரா தான்” என்றார்.
முன்னதாக, உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன்பு மே.இ. தீவுகள் அணியின் முன்னாள் வீரர் பிரைன் லாரா ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதிக்குத் தகுதி பெறும் என கணித்தார்.
ரசித் கான் பேசியதாவது:
“அரையிறுதிக்குள் நுழைந்தது கனவு போல் உள்ளது. உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன்பு எங்கள் மீது நம்பிக்கை வைத்த ஒரே நபர் லாரா தான். அவர் மட்டும்தான் நாங்கள் அரையிறுதிக்கு தகுதி பெறுவோம் என்றார். உலகக் கோப்பை தொடக்க நிகழ்ச்சியில் லாராவிடம், “உங்கள் வாக்கைக் காப்பாற்றுவோம். நீங்கள் சொன்னது சரி என நிரூபிப்போம்” என்றேன். தற்போது அரையிறுதிக்குள் நுழைந்ததை நினைத்து பெருமைப்படுகிறோம்” என்றார்.