

ஷ்ரேயஸ் ஐயர் உடல்நிலை குறித்து இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தகவல் தெரிவித்துள்ளார்.
இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது ஒருநாள் ஆட்டம் கடந்த அக்டோபர் 25 அன்று சிட்னியில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி அடித்த பந்தை லாவகமாக கேட்ச் பிடித்தார் இந்திய அணியின் துணை கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர்.
பின்னோக்கிச் சென்று இந்த கேட்சை பிடித்தபோது அவர் தடுமாறி கீழே விழுந்தார். இதில் நெஞ்சுப் பகுதியில் அவருக்குக் கடுமையான காயம் ஏற்பட்டது தெரிந்தது. உடனடியாக களத்திலிருந்து அவர் வெளியேறினார்.
இந்தக் காயம் காரணமாக நெஞ்சாங்கூட்டில் ரத்தக் கசிவு இருப்பதாகவும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது. பிசிசிஐ சார்பில் அதிகாரபூர்வமாக நேற்று அறிக்கை வெளியிட்டபோது, ஷ்ரேயஸ் ஐயர் சிகிச்சையில் இருப்பதாகவும் மருத்துவ ரீதியாக நிலையாக இருப்பதாகவும் அவர் குணமடைந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்திய அணியின் மருத்துவர் ஷ்ரேயஸ் ஐயருடன் சிட்னியில் இருப்பதாகவும் அவருடைய உடல்நிலை தேறி வருவதைக் கண்காணித்து வருவதாகவும் பிசிசிஐ சார்பில் தெரிவக்கப்பட்டது. இதனிடையே, ஷ்ரேயஸ் ஐயர் தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து சாதாரண அறைக்கு வந்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் கான்பெரா டி20-க்கு முன்பு செய்தியாளர்களைச் சந்தித்தார். ஷ்ரேயஸ் ஐயர் உடல்நிலை குறித்து செய்தியாளர்களிடம் அவர் விளக்கினார்.
"ஷ்ரேயஸ் ஐயரிடம் பேசினோம். அவருடைய காயம் குறித்து அறிந்தவுடன் நான் அவரை அழைத்தேன். பிறகு தான், அவருடைய ஃபோன் அவரிடம் இல்லை என்பதை நான் உணர்ந்தேன். பிறகு, எங்களுடைய ஃபிசியோ கம்லேஷ் ஜெயினை அழைத்துப் பேசினேன். ஷ்ரேயஸ் ஐயர் நிலையாக இருப்பதாக அவர் கூறினார்.
ஷ்ரேயஸ் ஐயருக்கு காயம் ஏற்பட்ட முதல் நாள் குறித்து என்னால் பெரிதாகக் கூற முடியாது. ஆனால், தற்போது அவர் நன்றாக இருக்கிறார். கடந்த இரு நாள்களாக அவருடன் நாங்கள் தொடர்பில் உள்ளோம். அவர் பதிலளித்து வருகிறார். அவரால் ஃபோனில் பதிலளிக்க முடிகிறது எனில், அவர் நிலையாகவே இருக்கிறார்.
மருத்துவர்கள் அவருடன் இருக்கிறார்கள். எல்லாமே சீராக உள்ளது. எனினும், சில நாள்களுக்கு அவர் கண்காணிப்பில் வைக்கப்படவுள்ளார். ஷ்ரேயஸ் ஐயர் எல்லோரிடமும் பேசுகிறார்.
ஷ்ரேயஸ் ஐயரின் காயத்தை நாங்கள் வெளியிலிருந்து தான் பார்த்தோம். கேட்ச் பிடித்த பிறகு, அவர் இயல்பாக இருந்ததைப்போலவே தெரிந்தது. களத்தில் அவருடன் இருந்தவர்களால் மட்டுமே காயத்தின் தீவிரத்தன்மை குறித்து விளக்க முடியும். ஓய்வறைக்குச் சென்றபிறகு, அவருக்குக் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது என்பதை எல்லோரும் உணர்ந்துள்ளார்கள். பிறகு தான் மருத்துவ நிபுணரிடம் ஷ்ரேயஸ் ஐயர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அவர் தான் நடந்ததை விளக்கினார்.
மருத்துவர்கள் மற்றும் ஃபிசியோக்கள் இதை துரதிர்ஷ்டவசமான காயம் எனக் கூறுகிறார்கள். அது அரியது என்கிறார்கள். ஷ்ரேயஸ் ஐயரும் அரிய திறமை கொண்டவர். அரிய நிகழ்வுகள் அரிய திறமை கொண்டவர்களுக்கே நிகழும். ஆனால், கடவுள் அவருடன் துணை நிற்கிறார். அவர் குணமடைந்து வருகிறார். பிசிசிஐ முழு ஆதரவுடன் இருந்து வருகிறது. நாங்கள் இந்தியா திரும்பும்போது, அவரையும் உடன் அழைத்துச் செல்வோம்" என்றார் சூர்யகுமார் யாதவ்.
India’s T20 captain Suryakumar Yadav has shared an update on Shreyas Iyer’s health condition.
Shreyas Iyer | Suryakumar Yadav |