
ஐபிஎல் 2025-ல் தனது கடைசி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றியுடன் விடைபெற்றது.
ஐபிஎல் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் 17.1 ஓவரிலேயே 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தானுக்கு யஷஸ்வி ஜெயிஸ்வால் தொடக்கத்தில் அதிரடி காட்டினார். 19 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் உள்பட 36 ரன்கள் எடுத்தார். இவர் ஆட்டமிழக்கும்போது ராஜஸ்தான் எடுத்த ரன்கள் 37.
வைபவ் சூர்யவன்ஷி மற்றும் சஞ்சு சாம்சன் வெற்றிக்குத் தேவையான ரன் ரேட்டை விட வேகமாக விளையாடினார்கள். 6 ஓவர்களில் 56 ரன்கள் எடுத்தது ராஜஸ்தான். சுழற்பந்துவீச்சையும் அற்புதமாக எதிர்கொள்ள முடியும் என்பதைக் காண்பித்து 27 பந்துகளில் அரை சதம் அடித்தார் சூர்யவன்ஷி.
ஆட்டத்தை சிஎஸ்கே பக்கம் திருப்பும் வகையில் சஞ்சு சாம்சன் (41) மற்றும் சூர்யவன்ஷி (57) ஆகியோரை ஒரே ஓவரில் வீழ்த்தி அஸ்வின் நம்பிக்கை கொடுத்தார். ரியான் பராகும் 3 ரன்களுக்கு நூர் அஹமது சுழலில் வீழ்ந்தார்.
ஆனால், ஐபிஎல் 2025-ல் தொடர்ச்சியாக ஃபினிஷிங்கில் சொதப்பி வந்த துருவ் ஜுரெல் மற்றும் ஷிம்ரோன் ஹெட்மயர் இம்முறை தவறை திருத்திக்கொண்டார்கள். கடைசி வரை சென்றால் தான் சிக்கல் என முன்கூட்டியே முனைப்பை வெளிப்படுத்தி 18-வது ஓவரின் தொடக்கத்திலேயே ஆட்டத்தை முடித்து வைத்தார்கள்.
துருவ் ஜுரெல் 12 பந்துகளில் 31 ரன்கள் எடுக்க, ஷிம்ரோன் ஹெட்மயர் 5 பந்துகளில் 12 ரன்கள் எடுத்தார். 17.1 ஓவரில் 188 ரன்கள் எடுத்த ராஜஸ்தான் ஐபிஎல் 2025-ஐ வெற்றியுடன் நிறைவு செய்தது.
முன்னதாக, ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள் சிறப்பாகப் பந்துவீசினார்கள். ஆர்ச்சர், சந்தீப் சர்மா இல்லையென்றால் என்ன புதிய பந்துவீச்சாளர்கள் அவர்களுடைய இடத்தை நிரப்பினார்கள். யுத்விர் சிங் தனது முதல் ஓவரிலேயே டெவான் கான்வே (10) மற்றும் உர்வில் படேல் (0) விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஆனால், ஆயுஷ் மாத்ரே வழக்கம்போல் பவர்பிளேயில் பவுண்டரிகளாக நொறுக்கினார். 20 பந்துகளில் 43 ரன்கள் எடுத்த மாத்ரே, பவர்பிளேயின் கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். நடுவரிசையில் சிஎஸ்கே மீண்டும் தடுமாறியது. அஸ்வின் 13, ஜடேஜா 1 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தார்கள். 10-வது ஓவரில் 100 ரன்களை எடுத்திருந்தாலும், 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. டியவால்ட் பிரேவிஸ் மட்டும் ரன் ரேட் குறைந்திடாதவாறு வேகமாக விளையாடினார்.
முந்தைய இரு ஆட்டங்களில் 98 ரன்கள் கொடுத்த ஆகாஷ் மத்வால், சிஎஸ்கேவுக்கு எதிராக வேறொரு பந்துவீச்சாளராக வந்தார். ராஜஸ்தானுக்கு அச்சுறுத்தலாக இருந்த பிரேவிஸ் (41) விக்கெட்டை முதலில் வீழ்த்தினார். அடுத்து பேட்டர்கள் இல்லாததால் ஷிவம் துபே மற்றும் எம்எஸ் தோனியால் அச்சம் இல்லாமல் அதிரடியை வெளிப்படுத்துவதில் தயக்கம் இருந்தது. 18 மற்றும் 19-வது ஓவரில் சிஎஸ்கே ஒரு பவுண்டரிகூட அடிக்கவில்லை. மத்வால் வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தில் ஷிவம் துபே (39) மற்றும் எம்எஸ் தோனி (16) ஆட்டமிழந்தார்கள்.
ஆட்டநாயகன் விருதை வென்ற மத்வால், 4 ஓவர்களில் 29 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனால், 200 ரன்களுக்கு மேல் எடுக்க வேண்டிய சிஎஸ்கே 187 ரன்களுக்கு கட்டுப்பட்டு தோல்வியடைந்தது. சிஎஸ்கே தனது கடைசி ஆட்டத்தில் மே 25 அன்று குஜராத் டைடன்ஸை எதிர்கொள்கிறது.