
கெளஹாத்தியில் ஞாயிறு இரவில் அற்புதமான டி20 ஆட்டம். என்ன, ஆட்டத்தின் முடிவு சிஎஸ்கேவுக்குச் சாதகமாக அமையவில்லை.
டாஸ் வென்ற ருதுராஜ், துணிச்சலாக பந்துவீச்சைத் தேர்வு செய்தார். 2-வதாக பேட்டிங் செய்வதால் அதற்கேற்றாற்போல் அணியில் சாம் கரண், ஹூடாவுக்குப் பதிலாக ஓவர்டன், விஜய் சங்கரைச் சேர்த்திருந்தார்கள்.
முதல் ஓவரில் ஜெயிஸ்வாலை 4 ரன்களுக்கு வீழ்த்தினார் கலீல் அஹமது. அதற்குப் பிறகு சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார் நிதிஷ் ராணா. ஓவர்டன் வீசிய 2-வது ஓவரில் ஒரு சிக்ஸரும் ஒரு பவுண்டரியும் அடித்தார். பவர்பிளேயில் ஓவர்டன் வீசிய 2-வது ஓவரில் இரு பவுண்டரிகளும் ஒரு சிக்ஸரும் கிடைத்தன. அஸ்வின் ஓவரில் இன்னும் அதிரடியாக விளையாடி இரு சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி அடித்தார் ராணா. பவர்பிளேயின் கடைசி ஓவரிலும் வானவேடிக்கை முடியவில்லை. கலீல் அஹமது வீசிய அந்த ஓவரில் 15 ரன்கள் எடுத்தது ராஜஸ்தான். பவர்பிளேயில் மட்டும் 79 ரன்கள் கிடைத்தன. 21 பந்துகளில் பவர்பிளேக்குள் அரை சதம் அடித்தார் ராணா.
நூர் அஹமதின் முதல் ஓவரிலேயே 20 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் சஞ்சு சாம்சன். அப்போது நிலைமை கைமீறி சென்றுகொண்டிருந்தது. எல்லா சிஎஸ்கே பந்துவீச்சாளர்களையும் வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தார் ராணா. அஸ்வினின் கடைசி ஓவரில் மேலும் ஒரு சிக்ஸரும் பவுண்டரியும் அடித்தார் ராணா.
ஐபிஎல் போட்டியில் இதுவரை 9 இன்னிங்ஸில் அஸ்வினின் 71 பந்துகளை எதிர்கொண்ட ராணா, 10 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 141 ரன்கள் எடுத்துள்ளார். இன்றுதான் முதல்முறையாக அவருடைய பந்துவீச்சில் வீழ்ந்தார். தோனி ஸ்டம்பிங்கில் வீழ்ந்த ராணா, 36 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 81 ரன்கள் குவித்து வெளியேறினார். 13-வது ஓவரின் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்து ஜம்மென்றிருந்தது ராஜஸ்தான். அதன்பிறகுதான் சிஎஸ்கே ஓரளவு ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது.
துருவ் ஜுரெலை 3 ரன்களுக்கு வீழ்த்தினார் நூர் அஹமது. அடுத்த ஓவரில் 4 ரன்களுக்கு ஜடேஜாவின் பந்தில் வீழ்ந்தார் ஹசரங்கா. இதற்குப் பிறகு தான் ஹெட்மையர் களமிறங்கினார். நூர் அஹமது 4 ஓவர்களில் 28 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி மீண்டும் பர்பிள் கேப்பைப் பெற்றுக்கொண்டார். 2 பவுண்டரிகளும் 2 சிக்ஸர்களும் அடித்து 37 ரன்கள் எடுத்த ரியான் பராக், பதிரனா பந்தில் போல்ட் ஆனார். 19-வது ஓவரில் இரு விக்கெட்டுகள் விழுந்தன. பதிரனா வீசிய கடைசி ஓவரில் ஹெட்மையர் 19 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கடைசியில் ராஜஸ்தான் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்தது. பவர்பிளேயில் ஆடிய ஆட்டத்துக்குக் குறைந்தது 200 ரன்களையாவது எடுத்திருக்க வேண்டும். நூர், பதிரனா மற்றும் இதர பந்துவீச்சாளர்கள் கடைசி 7 ஓவர்களில் சிறப்பாகப் பந்துவீசி ரன்களைக் கட்டுப்படுத்தினார்கள்.
2019 முதல் சிஎஸ்கே 180-க்கும் அதிகமான இலக்கை வெற்றி கொண்டதே இல்லை. இந்தப் புள்ளிவிவரம் சிஎஸ்கே ரசிகர்களுக்கு கிலியை ஏற்படுத்தியிருக்கும்.
ஜோஃப்ரா ஆர்ச்சர் வீசிய முதல் ஓவரிலேயே ரச்சின் ரவீந்திரா டக் அவுட் ஆனார். அந்த ஓவர் ராஜஸ்தானுக்கு மெய்டன் ஓவராக அமைந்தது. 3 ஓவர்களின் முடிவில் சிஎஸ்கே 5 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதுதான் கடைசியில் பெரிய நெருக்கடியையும் அளித்தது. 4-வது ஓவரின் முடிவில் தொடர்ச்சியாக இரு பவுண்டரிகள் அடித்து ஆட்டத்தைத் தொடங்கினார் ருதுராஜ். ஆர்ச்சரின் அடுத்த ஓவரில் ஒரு சிக்ஸரும் பவுண்டரியும் அடித்தார் திரிபாதி. பவர்பிளேயின் கடைசி ஓவரில் 3 பவுண்டரிகள் அடித்து ரசிகர்களுக்கு நிம்மதியளித்தார் ருதுராஜ். பவர்பிளேயில் சிஎஸ்கே 42 ரன்கள் எடுத்தது. நினைத்தது போல் விளையாட முடியாத திரிபாதி 19 பந்துகளில் 23 ரன்களுக்கு ஹசரங்கா பந்தில் ஆட்டமிழந்தார்.
இம்பாக்ட் வீரரான ஷிவம் துபே 10 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 1 பவுண்டரியுடன் 18 ரன்களுக்கு ஹசரங்கா பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து விஜய் சங்கரையும் 9 ரன்களுக்கு ஹசரங்கா வெளியேற்றினார். 37 பந்துகளில் அரை சதமெடுத்தார் ருதுராஜ். கடைசியில் 64 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சிஎஸ்கேவின் பெரிய தலைகளை வீழ்த்திய ஹசரங்கா இன்று 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். கெளகாத்தியில் எங்குப் பார்த்தாலும் மஞ்சள் டி ஷர்ட்டுகள். ரசிகர்களின் கரகோஷத்துக்கு நடுவே தோனி களமிறங்கினார். தோனி, ஜடேஜாவால் ரன்ரேட்டுக்கு ஏற்றாற்போல அடித்தாடுவது சிரமமாக இருந்தது. கடைசி ஓவர்களில் சிறப்பாக வீசினார்கள் ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள். தேஷ்பாண்டே வீசிய 19-வது ஓவரில் தோனி ஒரு சிக்ஸரும் பவுண்டரியும் அடிக்க, கடைசிப் பந்தில் அட்டகாசமான சிக்ஸரை அடித்தார் ஜடேஜா. கெளகாத்தி மைதானத்தில் சிஎஸ்கேவுக்கு ஆதரவு மேலும் பெருகியது.
கடைசி ஓவரின் முதல் பந்தில் டீப் மிட்விக்கெட்டில் ஹெட்மையரின் அற்புதமான கேட்சில் 16 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் தோனி. 4-வது பந்தில் ஓவர்டன் சிக்ஸர் அடித்தாலும் அடுத்த இரு பந்துகளிலும் அவரால் சாகசம் நிகழ்த்த முடியவில்லை. பரபரப்பாக முடிந்த இந்த ஆட்டத்தில் சிஎஸ்கே 20 ஓவர்களில் 176 ரன்கள் எடுத்து 6 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. 3 ஆட்டங்களில் இரு தோல்விகள். ராஜஸ்தான் அணி இதற்கு முன்பு இரு தோல்விகளையடைந்து தற்போது முதல் வெற்றியை அடைந்துள்ளது.