மும்பையை எளிதாக வீழ்த்தி முதல் இடத்துக்கு முன்னேறிய ராஜஸ்தான்!

மும்பை அணி மூன்று ஆட்டங்களில் விளையாடி மூன்றிலும் தோல்வி அடைந்து கடைசி இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது.
மும்பையை எளிதாக வீழ்த்தி முதல் இடத்துக்கு முன்னேறிய ராஜஸ்தான்!
மும்பையை எளிதாக வீழ்த்தி முதல் இடத்துக்கு முன்னேறிய ராஜஸ்தான்!ANI

மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நடப்பு ஐபிஎல் பருவத்தின் இன்றைய ஆட்டத்தில் மும்பை, ராஜஸ்தான் அணிகள் மும்பையில் விளையாடின. டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

கடந்த இரு ஆட்டங்களில் சொந்த மண்ணில் விளையாடாத மும்பை அணி இன்று மும்பையில் விளையாடியது. கடந்த ஆட்டத்தில் டாஸ் போட வரும் போது பாண்டியாவுக்கு எதிராக ரசிகர்கள் கூச்சலிட்டனர். இந்நிலையில் இன்றும் பாண்டியாவின் பெயரை சொல்லும்போது ரசிகர்கள் மௌனமாக இருந்தனர்.

பேட்டிங்கைத் தொடங்கிய மும்பை அணிக்கு ஆரம்பம் முதல் வேகமாக விக்கெட்டுகள் விழுந்தன. ரோஹித் சர்மா, நமன் திர், டெவால்ட் பிரெவிஸ் ஆகியோர் ரன் எதுவும் எடுக்காமல் முதல் பந்திலேயே வெளியேறினர். இவர்களது விக்கெட்டை போல்ட் வீழ்த்தினார். இதைத் தொடர்ந்து இஷான் கிஷனும் 16 ரன்களில் வெளியேற மும்பை அணி 4 விக்கெட்டுகளை இழந்து 20 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறியது.

இதைத் தொடர்ந்து திலக் வர்மா மற்றும் கேப்டன் பாண்டியா ஆகியோர் கூட்டணி அமைத்தனர். இருவரும் 56 ரன்கள் சேர்த்த நிலையில் பாண்டியா ஆட்டமிழந்தார். பாண்டியா 6 பவுண்டரிகளுடன் 21 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன் பிறகு திலக் வர்மா 2 சிக்ஸர்களுடன் 29 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து வெளியேறினார். இவர்களது விக்கெட்டை சஹால் வீழ்த்தினார்.

இதன் பிறகு யாரும் பெரியளவில் ரன்களை அடிக்கவில்லை. இதனால் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 125 ரன்கள் மட்டுமே அடித்தது. அதிகபட்சமாக போல்ட் மற்றும் சஹால் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து விளையாடிய ராஜஸதான் அணிக்கும் தொடக்கம் சரியாக அமையவில்லை. ஜெயிஸ்வால் 10, சாம்சன் 12, பட்லர் 13, அஸ்வின் 16 ரன்களில் அடுத்தடுத்து வெளியேறினர். கடந்த ஆட்டத்தில் ரன்களை வாரி வழங்கிய மபாக, ஜெயிஸ்வாலின் விக்கெட்டை எடுத்தார். ஆகாஷ் மத்வால் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

கடந்த ஆட்டத்தில் கலக்கிய ரியான் பராக் சற்று நிதானமாக தொடங்கினாலும், அதிரடியாக ஆட்டத்தை முடித்து வைத்தார். பராக் 3 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 39 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் விளையாடினார்.

இதன் மூலம் ராஜஸ்தான் அணி 4.3 ஓவர்கள் மீதமிருந்த நிலையில் இலக்கை எட்டி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை அணியை தனது சொந்த மண்ணில் எளிதாக வீழ்த்தியது ராஜஸ்தான் அணி.

ராஜஸ்தான் அணி மூன்று ஆட்டங்களில் விளையாடி மூன்றிலும் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது. மும்பை அணி மூன்று ஆட்டங்களில் விளையாடி மூன்றிலும் தோல்வி அடைந்து கடைசி இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in