ரியான் பராக் அதிரடியால் தில்லியை வீழ்த்திய ராஜஸ்தான்!

இதுவரை நடந்த 9 ஆட்டங்களிலும் சொந்த மண்ணில் விளையாடிய அணிகளே வெற்றி பெற்றுள்ளது.
ரியான் பராக் அதிரடியால் தில்லியை வீழ்த்திய ராஜஸ்தான்!
ரியான் பராக் அதிரடியால் தில்லியை வீழ்த்திய ராஜஸ்தான்!ANI

தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நடப்பு ஐபிஎல் பருவத்தின் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், தில்லி கேபிடல்ஸ் அணிகள் ஜெய்பூரில் விளையாடின. டாஸ் வென்ற தில்லி கேப்டன் ரிஷப் பந்த் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

ராஜஸ்தான் அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. வேகமாக விக்கெட்டுகள் சரிந்தன. அதிகம் எதிர்பார்த்த ஜெயிஸ்வால் 5 ரன்களிலும், கேப்டன் சாம்சன் 15 ரன்களிலும் மற்றும் பட்லர் 11 ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேறினர். இதனால் 8 ஓவர்களில் 38 ரன்கள் மட்டுமே அடித்து 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது ராஜஸ்தான் அணி.

நோர்க்கியா, கலீல் அஹ்மத், குல்தீப் யாதவ், அக்‌ஷர் படேல் மற்றும் முகேஷ் குமார் என தில்லி அணியில் அனைவரும் எதிரணிக்கு நெருக்கடி தந்தனர்.

இதைத் தொடர்ந்து ரியான் பராக் மற்றும் அஸ்வின் கூட்டணி அமைத்தனர். 54 ரன்கள் சேர்த்த இந்த ஜோடியை அக்‌ஷர் படேல் பிரித்தார். அஸ்வின் 3 சிக்ஸர்களுடன் 19 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன் பிறகு ஜூரல் 12 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து நோர்க்கியா பந்தில் ஆட்டமிழந்தார்.

ஒருபக்கம் விக்கெட்டுகள் விழுந்தாலும், மறுமுனையில் ரியான் பராக் அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்தார். குறிப்பாக கடைசி ஓவரில் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 25 ரன்களை குவித்தார். இதன் மூலம் ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்தது.

கடைசி வரை ஆட்டமிழக்காமல் விளையாடிய பராக் 6 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 45 பந்துகளில் 84 ரன்கள் அடித்தார். தில்லி அணியில் பந்துவீசிய அனைவரும் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து விளையாடிய தில்லி அணியில் மார்ஷ் அதிரடியான தொடக்கத்தை கொடுத்து, ரன்களை வேகமாக சேர்த்தார். பின்னர் 5 பவுண்டரிகளுடன் 23 ரன்கள் எடுத்த நிலையில் பர்கர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதன் பிறகு ரிக்கி புய் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

வார்னர் - ரிஷப் பந்த் ஜோடி சேர்ந்தனர். இருவரும் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்க்க அவேஷ் கான் இந்த கூட்டணியை பிரித்தார். இந்த ஜோடி 67 ரன்கள் சேர்த்தது. வார்னர் 3 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 34 பந்துகளில் 49 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

இதைத் தொடர்ந்து ரிஷப் பந்தும் 1 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 26 பந்துகளில் 28 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த போரெல் 9 ரன்களில் வெளியேற தில்லி அணிக்கு வெற்றி வாய்ப்பு குறைந்தது. இருந்தும் ஒருபக்கம் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் தனியாக அணியின் வெற்றிக்கு போராடினார்.

ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சாளர்கள் தொடர்ந்து நெருக்கடி அளிக்க 20 ஓவர்கள் முடிவில் தில்லி அணியால் 173 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. ஸ்டப்ஸ் 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 23 பந்துகளில் 44 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் விளையாடினார். அக்‌ஷர் படேல் ஆட்டமிழக்காமல் 15 ரன்கள் எடுத்தார்.

இதன் மூலம் இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதுவரை நடந்த 9 ஆட்டங்களிலும் சொந்த மண்ணில் விளையாடிய அணிகளே வெற்றி பெற்றுள்ளது. ரியான் பராக் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in