
துலீப் கோப்பை 2024-ல் இந்திய வீரர்களான கே.எல். ராகுல், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், கில் ஆகியோர் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவின் புகழ்பெற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டியான துலீப் கோப்பை வரும் செப்டம்பர் 5 முதல் 22 வரை நடைபெற உள்ளது.
இதில், கே.எல். ராகுல், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், கில், ஜெயிஸ்வால், ரஜத் படிதார், சர்ஃபராஸ் கான் ஆகியோர் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரிஷப் பந்த் கடைசியாக டிசம்பர் 2022-ல் டெஸ்டில் விளையாடினார். கே.எல். ராகுல், கடந்த ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஒரு டெஸ்டில் மற்றும் பங்கேற்றார். காயம் காரணமாக 4 டெஸ்டுகளை தவறவிட்டார்.
அதேபோல், வேகப்பந்து வீச்சாளர் ஷமியும் துலீப் கோப்பையில் பங்கேற்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
கடைசியாக 2023 ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடிய இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஷமி, அதன்பிறகு இந்திய அணி விளையாடிய எந்த ஒரு தொடரிலும் கணுக்கால் காயம் காரணமாகப் பங்கேற்கவில்லை.
இதைத் தொடர்ந்து காயத்துக்கு லண்டனில் அறுவை சிகிச்சை மேற்கொண்டார் ஷமி. சமீபத்தில் ஷமி தனது பயிற்சியைத் தொடங்கினார். வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் பங்கேற்க வாய்ப்புள்ளதாக இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்திருந்தார்.
எனவே, அவர் உடற்தகுதியை நிரூபிக்க குறைந்தது ஒரு ஆட்டத்திலாவது விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணி அடுத்த 6 வாரங்களுக்கு எந்தவிதமான சர்வதேச கிரிக்கெட் தொடரிலும் பங்கேற்கவில்லை.
வங்கதேசத்துக்கு எதிராக அக்டோபரில் டெஸ்ட் தொடர் நடக்கவுள்ள நிலையில், அதற்கு தயாராகும் வகையில் இந்திய அணியின் மூத்த வீரர்கள் பலரும் துலீப் கோப்பையில் பங்கேற்கவுள்ளனர்.
விராட் கோலி, கேப்டன் ரோஹித் சர்மா, பும்ரா, அஸ்வின் ஆகியோருக்கு மட்டும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாகவும், துலீப் கோப்பையில் பங்கேற்கும் இந்திய வீரர்களின் விவரத்தை விரைவில் பிசிசிஐ வெளியிடும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய அணி அடுத்த 5 மாதங்களில் வங்கதேசம், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒட்டுமொத்தமாக 10 டெஸ்டுகளில் விளையாடவுள்ளது.
இதனிடையே, உள்ளூர் கிரிக்கெட்டின் முக்கியத்துவம் குறித்து பிசிசிஐ செயலர் ஜெய் ஷா வீரர்களுக்கு ஒரு கடிதத்தை எழுதினார். அதில், மத்திய ஒப்பந்தத்தில் உள்ள இந்திய வீரர்கள் நாட்டுக்காக விளையாட விரும்பினால், அவர்கள் உள்ளூர் கிரிக்கெட்டில் நிரூபிக்க வேண்டும் என கூறினார். மேலும் உள்ளூர் கிரிக்கெட்டில் பங்கேற்காதது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்றார்.
இதன் தொடர்ச்சியாக 2023 - 2024 பருவத்துக்கான இந்திய கிரிக்கெட் வீரர்களுடனான பிசிசிஐ ஒப்பந்த பட்டியலில் இருந்து இஷான் கிஷன், ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோர் நீக்கப்பட்டனர்.
எனவே, இம்முறை அனைத்து மூத்த வீரர்களும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளுக்கு முக்கியத்துவம் அளிப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.