ஆர்சிபிக்குத் திரும்ப ராகுல் விருப்பம்!

ஏற்கெனவே 2013, 2016 ஆகிய ஆண்டுகளில் ராகுல் ஆர்சிபி அணியில் விளையாடினார்.
ஆர்சிபிக்குத் திரும்ப ராகுல் விருப்பம்!
ANI
1 min read

ஆர்சிபி அணியில் மீண்டும் விளையாட விரும்புவதாக கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் அணிகள் தாங்கள் தக்கவைத்துள்ள வீரர்களின் விவரங்களை கடந்த அக்.31 அன்று வெளியிட்டன. லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸில் கேஎல் ராகுல் தக்கவைக்கப்படவில்லை.

லக்னௌ அணியின் தக்கவைப்பு வியூகங்கள் குறித்து அந்த அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா கூறுகையில், “வெற்றி பெற வேண்டும் என்கிற மனநிலையுடன் விளையாடக்கூடிய, தனிப்பட்ட சாதனைகள் மற்றும் தனிப்பட்ட விருப்பங்களைக் காட்டிலும் அணியின் நலனை முன்னிறுத்தும் வீரர்களைத் தக்கவைக்க வேண்டும் என விரும்பினோம்” என்று தெரிவித்தார்.

கடந்த ஐபிஎல் பருவத்தின்போது ஹைதராபாதில் நடைபெற்ற ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னௌவை வீழ்த்தியது. இந்த ஆட்டத்துக்குப் பிறகு, மைதானத்திலேயே சஞ்சீவ் கோயங்கா கேப்டன் கேஎல் ராகுலிடம் ஆக்ரோஷமாக உரையாடினார். இந்தக் காட்சிகள் சமூக ஊடகங்களில் பேசுபொருளாக மாறியது.

இந்நிலையில் ஐபிஎல் ஏலத்துக்கு முன்பாக ஸ்டார் ஸ்போர்ட்ஸுக்கு பேட்டியளித்த கேஎல் ராகுல், “தன் மீது அன்பும் அக்கறையும் செலுத்தி மரியாதை தரும் அணியில் விளையாட விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

கேஎல் ராகுல் பேசியதாவது

வீரர்களைத் தக்கவைப்பது குறித்து முன்பே முடிவு செய்யப்பட்டது என நினைக்கிறேன். இனி நல்ல சூழல் உள்ள ஒரு அணியில் விளையாட விரும்புகிறேன். குறிப்பாக, உங்கள் மீது அன்பும் அக்கறையும் செலுத்தி மரியாதை தரும் அணியில்.

ஐபிஎல் போட்டிகளில் அழுத்தம் அதிகமாக இருக்கும். சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைடன்ஸ் அணிகளில் வெற்றியோ தோல்வியோ நிலைதடுமாறாமல் ஓய்வறையில் அமைதி நிலவுகிறது. அப்படியொரு சூழல் அமைந்தால் ஒரு வீரரால் தன் உச்சபட்ச திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பு உருவாகும்.

கடந்த ஆண்டுகளில் லக்னௌ அணியிலும் இதுபோன்ற ஒரு சூழலை உருவாக்க முயற்சித்தோம். ஆனால், சில நேரங்களில் உங்களின் நன்மைக்காக நீங்கள் வேறு இடத்திற்கு நகர வேண்டும்.

ஒருவருக்கு எப்போதும் ஏற்ற தாழ்வுகள் இருக்கும். ஆனால், தொடர்ந்து உங்களை நீங்கள் நிரூபித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

எனக்கு கேப்டன் பதவி வேண்டும் என யாரிடமும் கேட்க மாட்டேன். கடந்த ஆண்டுகளில் என்னுடைய செயல்பாட்டை கண்டு எனக்கு அப்பதவியை வழங்கினால், அதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வேன்.

ஆர்சிபி அணியில் மீண்டும் விளையாட விரும்புகிறேன். அது என் சொந்த மண். என்னை ஒரு கன்னடப் பையனாக ரசிகர்கள் பார்ப்பார்கள். சின்னசாமி மைதானத்திலேயே விளையாடி வளர்ந்ததால், அந்த மைதானம் குறித்து நான் நன்கு அறிவேன். ஆனால், ஏலத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.

இவ்வாறு ராகுல் பேசியுள்ளார்.

ஏற்கெனவே 2013, 2016 ஆகிய ஆண்டுகளில் ராகுல் ஆர்சிபி அணியில் விளையாடினார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in