பிரெஞ்சு ஓபன்: முதல் சுற்றிலேயே நடால் அதிர்ச்சித் தோல்வி!

நோவக் ஜோகோவிச், ராபின் சோடர்லிங் வரிசையில் பிரெஞ்சு ஓபனில் ரஃபேல் நடாலை வீழ்த்திய மூன்றாவது வீரர் எனும் பெருமையை அலெக்ஸ் ஸ்வெரெவ் பெற்றார்.
பிரெஞ்சு ஓபன்: முதல் சுற்றிலேயே நடால் அதிர்ச்சித் தோல்வி!
படம்: https://x.com/rolandgarros/media

பிரெஞ்சு ஓபன் டென்னிஸில் நட்சத்திர வீரர் ரஃபேல் நடால் முதன்முறையாக முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறியுள்ளார்.

2005-ல் தனது 18 வயதில் முதன்முறையாக பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வென்ற ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால், இதுவரை மொத்தம் 14 முறை பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார். இவருக்கு அடுத்தபடியாக அதிக முறை பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வென்றவர் மேக்ஸ் டெகஜிஸ் (8 முறை). கடைசியாக 2022-ல் பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வென்றார் ரஃபேல் நடால். கடந்தாண்டு காயம் காரணமாக போட்டியில் பங்கேற்கவில்லை. தான் முதன்முறையாக பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வென்றதிலிருந்து 115 ஆட்டங்களில் மூன்று முறை மட்டுமே இவர் தோல்வியடைந்துள்ளார்.

அடுத்த மாதம் 38 வயதை அடையவுள்ளதால், இதுவே நடாலின் கடைசி பிரெஞ்சு ஓபன் போட்டியாக இருக்கலாம் என்று கூறப்பட்டு வருகிறது. இந்தச் சூழலில் பிரெஞ்சு ஓபன் ஜாம்பவனாக இந்தப் போட்டியில் களமிறங்கினார் நடால். ஆடவர் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் ஜெர்மனியைச் சேர்ந்த அலெக்ஸ் ஸ்வெரெவை எதிர்த்து விளையாடினார் நடால்.

ஆனால், தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிய ஸ்வெரெவ் முதல் செட்டை 6-3 என கைப்பற்றினார். இரண்டாவது சுற்றில் ஆட்டத்தைக் கையிலெடுக்க நடால் போராடினார். பரபரப்பாகச் சென்ற இந்த செட்டையும் இறுதியில் ஸ்வெரெவ் 7-6(7/5) என்ற கணக்கில் கைப்பற்றினார். மூன்றாவது செட்டையும் ஸ்வெரெவ் 6-3 என கைப்பற்ற 6-3, 7-6, 6-3 என்ற நேர் செட் கணக்கில் ஸ்வெரெவ் வெற்றி பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் நோவக் ஜோகோவிச், ராபின் சோடர்லிங் வரிசையில் பிரெஞ்சு ஓபனில் நடாலை வீழ்த்திய மூன்றாவது வீரர் எனும் பெருமையை ஸ்வெரெவ் பெற்றார். 2022-ல் நடால் பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வென்றபோது, அரையிறுதியில் ஸ்வெரெவை வீழ்த்தினார். ஆனால், இன்று ஆட்டம் அப்படியே மாறிப்போனது. பிரெஞ்சு ஓபன் போட்டியில் முதன்முறையாக முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து நடால் வெளியேறினார்.

தோல்விக்குப் பிறகு நடால் கூறியதாவது:

"இதுவே எனது கடைசியா என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியாது. ஆனால், இன்றைய ஆட்டத்தை ரசித்து விளையாடினேன். இதற்குத் தயாராகத் தொடங்கியதிலிருந்து, இன்று வரை ஒருவாரமாக ரசிகர்கள் ஆதரவாக இருந்தார்கள்.

தற்போதைய உணர்வுகளை வார்த்தைகளில் வடிவமைப்பது கடினம். ஆனால், நான் மிகவும் விரும்பக்கூடிய இடத்தில் அன்பை உணர்வது சிறப்பானதாக உள்ளது.

இரு மாதங்களுக்கு முன்பைக் காட்டிலும் உடல் தேறியிருக்கிறது. இது போதும் என இரு மாதங்களில் சொல்லக்கூடும். ஆனால், அதற்கான உணர்வு இதுவரை தோன்றவில்லை" என்றார் நடால்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in