
22 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற ரஃபேல் நடால் டென்னிஸிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த நட்சத்திர வீரரான ரஃபேல் நடால் தனது 14 வயதில் தொழில்முறையாக டென்னிஸ் விளையாட தொடங்கினார்.
2005-ல் தனது 18 வயதில் முதன்முறையாக பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வென்ற நடால், இதுவரை மொத்தம் 14 முறை பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.
அதேபோல், யுஎஸ் ஓபன் பட்டத்தை 4 முறையும், ஆஸ்திரேலியா ஓபன் பட்டத்தை 2 முறையும், விம்பிள்டன் பட்டத்தை 2 முறையும் வென்றுள்ளார்.
தனது டென்னிஸ் வாழ்க்கையில் மொத்தம் 22 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற ரஃபேல் நடால் டென்னிஸிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். வருகிற நவம்பரில் நடைபெறவுள்ள டேவிஸ் கோப்பையுடன், தான் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாகவே ரஃபேல் நடால் காயத்தால் பாதிக்கப்பட்ட நிலையில், அவர் ஓய்வு பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்தாண்டு நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன், யுஎஸ் ஓபன் போன்ற பெரியப் போட்டிகளிலிருந்து விலகிய அவர், பிரெஞ்சு ஓபனில் முதன்முறையாக முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறினார்.
இந்நிலையில் தனது ஓய்வு குறித்து அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் ரஃபேல் நடால்.