வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்டில் தெ.ஆ. அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
வங்கதேசத்துக்குப் பயணம் மேற்கொண்டுள்ள தெ.ஆ. அணி 2 டெஸ்டுகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
முதல் டெஸ்ட் கடந்த அக்.21 அன்று மிர்பூரில் தொடங்கியது.
முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணி தெ.ஆ. அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 106 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக மஹ்முதுல் ஹசன் 30 ரன்கள் எடுத்தார். தெ.ஆ. அணி தரப்பில் ரபாடா, கேஷவ் மஹாராஜ் மற்றும் முல்டர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் கைல் வெரைனின் அதிரடியான சதத்தால் தெ.ஆ. அணி 308 ரன்கள் எடுத்தது. வெரைன் 2 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 114 ரன்கள் எடுத்தார். முல்டர் 54 ரன்கள் எடுத்தார். வங்கதேசம் தரப்பில் தைஜுல் இஸ்லாம் 5 விக்கெட்டுகளையும், ஹசன் மஹ்முத் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதன் பிறகு விளையாடிய வங்கதேச அணி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க போராடியது. 112 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய வங்கதேச அணியை, சரிவில் இருந்து மீட்டார் மெஹதி ஹசன். ஒரு சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 97 ரன்கள் எடுத்து 3 ரன்களில் சதத்தை தவறவிட்டு வெளியேறினார். இதன் மூலம் வங்கதேச அணி 307 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தெ.ஆ. அணி தரப்பில் ரபாடா 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
106 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய தெ.ஆ. அணிக்கு 41 ரன்கள் அடித்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தார் டோனி டி ஜோர்ஜி. ஸ்டப்ஸ் ஆட்டமிழக்காமல் 30 ரன்களும், கேப்டன் மார்க்ரம் 20 ரன்களும் எடுக்க தெ.ஆ. அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்த டெஸ்டில் வெற்றி பெற்றுள்ளது. கைல் வெரைன் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதன் மூலம் தெ.ஆ. அணி, டெஸ்டில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆசிய மண்ணில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் இத்தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் அக்.29 அன்று நடைபெறுகிறது.