நூர் அஹமத் தேர்வை விமர்சித்த பிடாக் பிரசன்னா: காணொளியை நீக்கிய அஸ்வின்!

அஸ்வின் சிஎஸ்கே அணியில் இடம்பெற்றுள்ள நிலையில், அவருடைய சக வீரரான நூர் அஹமதை விமர்சித்துப் பேசுவதை தனது யூடியூப் பக்கத்திலேயே அனுமதிப்பது...
நூர் அஹமத் தேர்வை விமர்சித்த பிடாக் பிரசன்னா: காணொளியை நீக்கிய அஸ்வின்!
ANI
1 min read

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் நூர் அஹமதைத் தேர்வு செய்ததை பிடாக் பிரசன்னா விமர்சித்துப் பேசியது சர்ச்சையான நிலையில், அந்தக் காணொளியை அஸ்வின் தனது யூடியூப் பக்கத்திலிருந்து நீக்கியுள்ளார்.

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆர் அஸ்வின் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். ஐபிஎல் மெகா ஏலத்தில் ரூ. 9.75 கோடிக்குத் தேர்வு செய்யப்பட்டார். இவருடன் ஆப்கானிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் நூர் அஹமத் ரூ. 10 கோடிக்கு தேர்வு செய்யப்பட்டார்.

அஸ்வின் தனது யூடியூப் சேனலில் கிரிக்கெட் பற்றி பல்வேறு கோணங்களில் அலசி ஆராய்ந்து காணொளிகளை வெளியிடுவது வழக்கம். ஐபிஎல் போட்டி குறித்தும் தொடர்ச்சியாகக் காணொளிகளை வெளியிட்டு வருகிறார். அஸ்வின் பங்குபெறாத நேரத்தில் சிறப்பு விருந்தினர்கள் பங்குபெற்று கிரிக்கெட் குறித்து அலசி ஆராய்ந்து கருத்துகளை முன்வைப்பார்கள்.

ஐபிஎல் போட்டியில் ஒவ்வொரு ஆட்டம் குறித்தும் அஸ்வின் யூடியூப் பக்கத்தில் தொடர்ச்சியாகக் காணொளிகள் வெளியாகி வருகின்றன. சிஎஸ்கே முன்னாள் வீரர் வித்யூத் மற்றும் பிரபல பயிற்சியாளரும் அனலிஸ்டுமான பிடாக் பிரசன்னா ஆட்டம் பற்றிய தங்களுடையப் பார்வைகளை முன்வைத்து வருகிறார்கள். வெற்றி தோல்விக்கான காரணங்களை அடுக்குகிறார்கள்.

அண்மையில் நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் இடையிலான ஆட்டம் குறித்தும் காணொளி வெளியானது. சிஎஸ்கே தொடர்ந்து இரண்டாவது முறையாகத் தோல்வியைச் சந்தித்த நிலையில், தோல்விக்கான காரணம் குறித்து வித்யூத் மற்றும் பிடாக் பிரசன்னா விரிவாகப் பேசினார்கள்.

இதில், சிஎஸ்கே செய்த தவறுகள் எனப் பட்டியலிட்ட பிடாக் பிரசன்னா, அணியில் ஜடேஜா மற்றும் அஸ்வின் இருக்கும்போது ஐபிஎல் ஏலத்தில் நூர் அஹமதைத் தேர்வு செய்தது மூன்றாவது தவறு என்று குறிப்பிட்டுப் பேசினார். இது பெரும் பேசுபொருளானது.

அஸ்வின் சிஎஸ்கே அணியில் இடம்பெற்றுள்ள நிலையில், அவருடைய சக வீரரான நூர் அஹமதை விமர்சித்துப் பேசுவதை தனது யூடியூப் பக்கத்திலேயே அனுமதிப்பது எப்படி சரியாக இருக்கும் என சமூக ஊடகங்களில் ரசிகர்கள் கேள்வியெழுப்பினார்கள். பெரும் விவாதமான நிலையில், சம்பந்தப்பட்ட காணொளியை அஸ்வின் தனது யூடியூப் பக்கத்திலிருந்து நீக்கியுள்ளார்.

மேலும், சிஎஸ்கே அணியில் அஸ்வின் எதிர்பார்த்த அளவுக்குச் செயல்படாதபோது, பந்துவீச்சில் நம்பிக்கையளித்து வரும் நூர் அஹமத் தேர்வை விமர்சிப்பதில் என்ன நியாயம் என்று பிடாக் பிரசன்னாவையும் ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள்.

ஐபிஎல் 2025-ல் அஸ்வின்

  • ஆட்டங்கள் - 3

  • விக்கெட்டுகள் - 3

  • பந்துவீச்சு சராசரி - 33

  • எகானமி - 9.9

ஐபிஎல் 2025-ல் நூர் அஹமத்

  • ஆட்டங்கள் - 3

  • விக்கெட்டுகள் - 9

  • பந்துவீச்சு சராசரி - 9.11

  • எகானமி - 6.83

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in