ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் குயின்டன் டி காக் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 97 ரன்கள் விளாச கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நடப்பு ஐபிஎல் பருவத்தின் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் அஜிங்க்யா ரஹானே பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
கொல்கத்தாவில் உடல்நலம் சரியில்லாததால் சுனில் நரைன் விளையாடவில்லை. மொயீன் அலி சேர்க்கப்பட்டார். ராஜஸ்தானில் ஃபசல்ஹக் ஃபரூக்கி பதில் வனிந்து ஹசரங்கா சேர்க்கப்பட்டார்.
ராஜஸ்தானுக்கு சுமாரான தொடக்கமே அமைந்தது. சஞ்சு சாம்சன் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். ஜெயிஸ்வால் மற்றும் ரியான் பராக் சற்று அதிரடி காட்டியதால் அந்த 6 ஓவர்களில் 54 ரன்கள் எடுத்தது.
மொயீன் அலி மற்றும் வருண் சக்ரவர்த்தி என சுழற்பந்துவீச்சு வந்தவுடன் ஆட்டம் கேகேஆர் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. ரியான் பராகை (25) வருண் சக்ரவர்த்தியும் ஜெயிஸ்வாலை (29) மொயீன் அலியும் வீழ்த்தினார்கள். ஹசரங்காவை முன்கூட்டியே களமிறக்கியதும் பலனளிக்கவில்லை. 10 ஓவர்களில் ராஜஸ்தான் 76 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகளை இழந்தது.
நிதிஷ் ராணாவும் ஆட்டமிழந்ததால், முதல் இன்னிங்ஸிலேயே கூடுதல் பேட்டராக ஷுபம் துபேவை இம்பாக்ட் வீரராக களமிறக்கினார்கள். அவரும் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றினார்.
துருவ் ஜுரெல் மட்டும் சற்று பொறுப்புடன் விளையாடி 33 ரன்கள் எடுத்தார். கடைசி நேரத்தில் ஜோஃப்ரா ஆர்ச்சர் இரு சிக்ஸர்கள் அடித்ததால், ராஜஸ்தான் அணியால் 150 ரன்களை கடக்க முடிந்தது.
20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்தது.
152 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் தொடக்க பேட்டர்களாக மொயீன் அலி மற்றும் குயின்டன் டி காக் களமிறங்கினார்கள். கடந்த ஆட்டத்தில் 76 ரன்கள் கொடுத்த மோசமான சாதனையைப் பதிவு செய்த ஜோஃப்ரா ஆர்ச்சர் இந்த இன்னிங்ஸை மெய்டனுடன் தொடங்கினார்.
பவர்பிளேயில் மொயீன் அலி தடுமாற டி காக் சரவெடியாய் வெடித்தார். 6 ஓவர்களில் கேகேஆர் 40 ரன்கள் எடுத்தது. இதில் டி காக் எடுத்த ரன்கள் மட்டும் 34. பவர்பிளே முடிந்தவுடன் மொயீன் அலி 5 ரன்களுக்கு ரன் அவுட் ஆனார். கேப்டன் ரஹானே 18 ரன்கள் எடுத்து வனிந்து ஹசரங்கா வீசிய முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார்.
அனுபவத்தைப் பயன்படுத்தி சரியாக விளையாடி வந்த டி காக் 35 பந்துகளில் அரை சதம் அடித்து, வெற்றிக்குத் தேவையான ரன் ரேட்டில் அணியைக் கச்சிதமாக வழிநடத்திச் சென்றார். அங்ரிஷ் ரகுவன்ஷி டி காக் வழிகாட்டுதலில் இலக்கை நோக்கி பயணித்தார். கடைசி வரை சற்று நெருக்கமாக எடுத்துச் சென்று கேகேஆருக்கு அழுத்தத்தைக் கொடுத்த ராஜஸ்தான் நினைத்தது.
ஆனால், 18 பந்துகளில் 17 ரன்கள் தேவை என்ற நிலையில் ஆர்ச்சர் வீசிய ஓவரில் ஒரு பவுண்டரி, இரு சிக்ஸர்களை பறக்கவிட்டு 18-வது ஓவரிலேயே ஆட்டத்தை முடித்தார் டி காக்.
கேகேஆர் அணி 17.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்து 15 பந்துகள் மீதமிருக்க 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டி காக் 61 பந்துகளில் 97 ரன்கள் எடுத்தார். ரகுவன்ஷி 22 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இரண்டாவது ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 2 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் விளையாடிய இரு ஆட்டங்களிலும் தோல்வியைச் சந்தித்து புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.