
ஒலிம்பிக் போட்டிகளில் இரண்டு முறை பதக்கம் வென்ற இந்திய பாட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்துவிற்கு, இம்மாதம் திருமணம் நடைபெற உள்ளது.
ஹைதராபாதைச் சேர்ந்த பாசிடெக்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான வெங்கட தத்தா சாயை வரும் டிசம்பர் 22 அன்று உதய்பூரில் பி.வி. சிந்து திருமணம் செய்ய இருக்கிறார்.
வெங்கட தத்தா சாய், ஐபிஎல்-லில் தில்லி கேபிடல்ஸ் அணியின் பங்கு நிறுவனங்களில் ஒன்றான ஜேஎஸ்டபிள்யூ நிறுவனத்திலும் பணியாற்றி உள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற சையத் மோடி சர்வதேச போட்டியில் பட்டத்தை வென்றார் பி.வி. சிந்து. இந்நிலையில் பி.வி. சிந்துவின் திருமணம் குறித்த தகவலை அவரது தந்தை உறுதிசெய்துள்ளார்.
இது குறித்து பி.வி. சிந்துவின் தந்தை கூறுகையில், “இரண்டு குடும்பங்களும் ஏற்கனவே ஒருவரையொருவர் அறிந்திருந்தாலும், ஒரு மாதத்திற்கு முன்புதான் அனைத்தும் முடிவு செய்யப்பட்டன. அதன்படி, டிசம்பர் 22 அன்று திருமணமும், டிசம்பர் 24 அன்று ஹைதராபாதில் வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளன” என்று தெரிவித்துள்ளார்.