
ஐபிஎல்லில் இதுவரை ஒரு முறை கூட கோப்பையை வெல்லாத பஞ்சாப் அணி ஏலத்தில் அதிகபட்சமாக 23 வீரர்களை தேர்வு செய்தது. இருப்பினும் 19 வீரர்களை எதிரணிகளிடம் இழந்தது.
முகேஷ் குமார், மெக்கர்க், ஹாரி புரூக், அஷுடோஷ் சர்மா ஆகியோருக்காக முறையே ரூ. 8 கோடி, ரூ. 9 கோடி, ரூ. 6 கோடி, ரூ. 3.6 கோடி வரை சென்றிருந்தாலும், நான்கு பேரையும் தில்லியிடம் கோட்டைவிட்டது பஞ்சாப்.
வெளிநாட்டு வீரர்களான ரச்சின் ரவிந்திரா, கான்வே மற்றும் நேதன் எலிஸ் ஆகியோரை சிஎஸ்கேவிடம் பறிகொடுத்த பஞ்சாப், அவர்களுக்காக முறையே ரூ. 4 கோடி, ரூ. 6 கோடி, ரூ. 1.6 கோடி வரை முயற்சித்தது.
சாய் கிஷோர், ஜெரால்டு கோட்ஸியா மற்றும் அர்ஷத் கானைத் தேர்வு செய்ய முயற்சி செய்தும், அவர்களை குஜராத்திடம் இழந்தது பஞ்சாப். ஆகாஷ் தீப், அப்துல் சமத் ஆகியோருக்காக பஞ்சாப் முறையே ரூ. 7.75 கோடி, ரூ. 4 கோடி வரை போட்டியிட்டும், இறுதியில் அவர்களை லக்னௌ அணி தேர்வு செய்தது.
ஜேகப் பெத்தல் மற்றும் ஜிதேஷ் சர்மாவை தேர்வு செய்தது ஆர்சிபி. அவர்களுக்காக முறையே ரூ. 2.4 கோடி, ரூ. 7 கோடி வரை சென்று பார்த்தது பஞ்சாப்.
ஹர்ஷல் படேல், இஷான் கிஷனுக்காக கடைசி வரை போராடியும் சன்ரைசர்ஸ் அணியிடம் இழந்த பஞ்சாப் அணி ஆகாஷ் மத்வால், வில் ஜேக்ஸ், ஸ்பேன்ஸர் ஜான்சன் ஆகியோரையும் எதிரணிகளிடம் கோட்டைவிட்டது.